Published : 30 Sep 2025 10:10 PM
Last Updated : 30 Sep 2025 10:10 PM
சென்னை: தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளப் பக்கத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் நிகழ்ந்த நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில், தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பிரிவு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். அந்தப் பதிவில், ‘சாலையில் நடந்து சென்றாலே தடியடி. சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது. இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால் மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சிதான் ஒரே வழி.
எப்படி இலங்கையிலும், நேபாளத்திலும் இளைஞர்களும், ஜென் ஸீ தலைமுறையும் ஒன்றாய் கூடி அதிகாரத்துக்கு எதிரான புரட்சியை உருவாக்கிக் காட்டினார்களோ, அதேபோல இங்கும் இளைஞர்களின் எழுச்சி நிகழும். அந்த எழுச்சிதான் ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளமாகவும் அரச பயங்கரவாதத்துக்கான முடிவுரையாகவும் இருக்கபோகிறது. பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவை வெளியிட்ட சற்று நேரத்திலேயே தனது எக்ஸ் தளத்தில் இருந்து பதிவை ஆதவ் அர்ஜுனா நீக்கி விட்டார். ஆனாலும், அவர் பதிவிட்ட கருத்து சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஆதவ் அர்ஜுனா மீது கலவரத்தைத் தூண்டும் வகையில் கருத்து வெளியிட்டதாக, சென்னை சைபர் க்ரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, அவரைக் கைது செய்வது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் போலீஸார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். அவர் எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT