Published : 30 Sep 2025 08:33 PM
Last Updated : 30 Sep 2025 08:33 PM
சென்னை: ‘கரூர் மரணங்களை மையப்படுத்தி பாஜக நடத்தும் மலிவான அரசியலை முறியடிப்போம்’ என்று குறிப்பிட்டுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், “அரசியல் களத்துக்கு புதிதாக வந்துள்ள கட்சியை சுற்றி வளைக்கும் அரசியல் சதிவலையை பாஜக விரித்திருக்கிறது” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை நிகழ்வில் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததும், 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டதுமான துயரச் சம்பவம் நெஞ்சை விட்டு அகலாமல் வேதனைப்படுத்தி வருகிறது. அக்கட்சியின் தலைவரும், நிர்வாகிகளும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல், காவல் துறையின் பொதுவான கட்டுப் பாடுகளையும் மதிக்காமல் நடந்து கொண்டதே பேரபாய விளைவுக்கு காரணமாகி விட்டது.
அந்த துயரச் செய்தி, தமிழக முதல்வருக்கு எட்டிய ஆரம்ப நிலையில் இருந்தே அவரும், அரசும் போர்க்கால வேகத்தில் செயல்பட்டதின் காரணமாக உயிரிழப்புகள் தடுக்கப்பட்டு, பெரும் எண்ணிக்கையில் மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். முதல்வரும், அமைச்சர்களும், உயர் அலுவலர்களும், இரவோடு இரவாக சம்பவ இடத்துக்கு சென்று, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களையும், உயிர் பலி கொடுத்து கதறி அழுதபடி நின்றிருந்த குடும்பங்களுக்கும் ஆறுதல் கூறி, ஆற்றுப்படுத்தியது நாடு முழுவதும் வரவேற்கப்படுகிறது.
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பரிசோதனைப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் சேவை மகத்தானது. இந்த உண்மை நிலைகளை மறைத்தும், மறுத்தும் வன்மம் வழியும் வஞ்சக நெஞ்சு கொண்டோர் சமூக ஊடகங்களில் அரசுக்கும், ஆளும் கட்சிக்கும் எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறார்கள். இந்த விஷமத்தனத்தின் பின்னணியில் உள்ள அரசியல் சக்திகளை தமிழக மக்கள் நன்கறிவார்கள். அவைகளை வரும் காலத்தில் முற்றாக துடைத்தெறிந்து பாடம் புகட்டுவார்கள் என்பதில் எள் நுனியும் சந்தேகமில்லை.
ஆனால், அரசியல் களத்துக்கு புதிதாக வந்துள்ள கட்சியை சுற்றி வளைக்கும் அரசியல் சதிவலையை பாஜக விரித்திருக்கிறது. கரூர் சம்பவம் குறித்து விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் மாநில அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ள நிலையில், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அமைத்திருப்பதும், அந்தக் குழு உறுப்பினர் ஒருவர் வெளியிட்டுள்ள கருத்தும் ஆழ்ந்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது.
கொள்கை எதிரியாக பாஜகவை அடையாளப்படுத்துவது நெஞ்சறிந்த உண்மையா, பூசிக் கழுவும் அரிதாராப் பூச்சா என்ற வினாக்களும் எழுகின்றன. பேரிடர் துயரங்களில் ஏற்படும் மரணங்களை மையமாக வைத்து ஆதாயம் தேடும் மலிவான அரசியலை தமிழ்நாட்டு மக்கள் முறியடிப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, ‘கரூர் சம்பவத்தில் சதி உள்ளதாக கூறி இருக்கும் தவெக குற்றச்சாட்டின் உண்மை தன்மை குறித்தும், முழுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்தும் மத்திய அரசுக்கு பாஜக பரிந்துரை செய்யும். எனவே, உண்மை கண்டறியும் தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவை விஜய் சந்திக்க வேண்டும். சம்பவத்தின்போது, என்ன நடந்தது என்பது குறித்து உண்மை நிலவரங்களை விஜய் விளக்க வேண்டும். ஏனெனில், நடந்த விஷயங்களை நேரில் நின்று பார்த்தவர், முதல் சாட்சியாக அறியப்படுபவர் விஜய்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் குழுவினர் மக்களிடம் விசாரணை நடத்தினாலும், காவல் துறை அதிகாரிகளிடம் கேட்டு தெரிந்து கொண்டாலும் நடிகர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் அளிக்கக் கூடிய தகவல்கள் உண்மைகளை தெளிவாக எடுத்து கூறுபவையாக இருக்கும் என்பதால் அவர் தனது கட்சி நிர்வாகிகளுடன் எம்பிக்கள் குழுவைச் சந்தித்து தன்னுடைய கருத்துக்களைத் தெரிவிக்க வேண்டும். உண்மை அறியும் எம்பிக்கள் குழுவுடன் விஜய் இணைந்து கரூர் சம்பவத்தின் பின்னணி குறித்த விவரங்களை வெளிக்கொணர முழு முயற்சி செய்ய வேண்டும்’ என்று தமிழக பாஜக கேட்டுக் கொண்டது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT