Published : 30 Sep 2025 03:25 PM
Last Updated : 30 Sep 2025 03:25 PM
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் விபி மதியழகன் மற்றும் தவெக தொண்டர் பவுன்ராஜ் ஆகியோரை அக்டோபர் 15 வரை நீதிமன்றக் காவலில் வைக்க கரூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5 பிரிவுகளின் கீழ் வழக்கு: கரூர் வேலுசாமிபுரத்தில் செப்.27-ம் தேதி நடைபெற்ற தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக கரூர் நகர போலீஸார் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் வி.பி.மதியழகன், பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த், மாநில இணைச் செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அளித்த புகாரின்பேரில் தவெகவினர் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அடுத்து கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் செல்போனை அணைத்துவிட்டு தலைமறைவானார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு வி.பி.மதியழகனை தேடி வந்தனர்.
10 மணி நேரம் விசாரணை: இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகேயுள்ள கிராமத்தில் உள்ள உறவினர் பவுன்ராஜ் வீட்டில் பதுங்கியிருந்த வி.பி.மதியழகனை தனிப்படையினர் நேற்றிரவு கரூர் அழைத்து வந்தனர். அவருடன் பவுன்ராஜும் அழைத்துவரப்பட்டார். கரூர் நகர காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட மதியழகனிடம் கரூர் எஸ்.பி.கே.ஜோஷ்தங்கையா, ஏடிஎஸ்பி பிரம்ஆனந்தன் மற்றும் வெளிமாவட்ட எஸ்.பிக்கள் விசாரணை நடத்தினர். மற்றொரு தவெக ஆதரவாளரான பவுன்ராஜும் கைது செய்யப்பட்டு அவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி பரத் குமார் வழக்கை விசாரித்தார். அரசுத் தரப்பிலும், தவெக தரப்பிலும் காரசாரமாக வாக்குவாதம் நிகழ்ந்தது.
காரசார வாதம்: நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில், ”கூட்டம் அளவு கடந்து சென்றதும் பேருந்தை முன்பே நிறுத்தச் சொல்லி நாங்கள் சொன்னோம் - ஆதவ் அர்ஜுனா கேட்கவில்லை. பிரச்சாரத்துக்கு வேலுச்சாமிபுரம் இடம் போதுமென்று புஸ்ஸி ஆனந்த் தான் கூறினார். அப்போதே அவர் அந்த இடம் வேண்டாம் என்று சொல்லியிருக்கலாமே. மேலும், நேர அட்டவணையை விஜய் கடைப்பிடிக்கவில்லை. ராங் ரூட்டில் சென்றார். விஜய் சொன்னபடி சரியான நேரத்தில் வந்திருந்தால் கூட்ட நெரிசலே ஏற்பட்டிருக்காது.” என்று தெரிவிக்கப்பட்டது.
அதற்கு தவெக தரப்பு வழக்கறிஞர், “எங்களை நம்பி வந்தவர்கள் உயிரிழந்துவிட்டார்கள் என்பதில் எங்களுக்குத் தான் அதிக வருத்தம். அதனால்தான் விஜய் வெளியே வரவில்லை. கரூரில் பிரச்சாரம் நடந்த இடத்திலிருந்த சாலை நடுவே உள்ள தடுப்பை எடுத்துக் கொடுத்திருந்தால் பிரச்சாரத்துக்கு சுலபமாக இருந்திருக்கும். மேலும், இவ்வளவு கூட்டம் வரும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை. சனிக்கிழமை வாரச் சம்பள நாள் என்பதால் கூட்டம் குறைவாகவே வரும் என்றுதான் நாங்கள் நினைத்தோம். மேலும், நாங்கள் கட்சிக்காரர்களை தடுக்கலாம். மக்களை கட்டுப்படுத்த வேண்டியது போலீஸ் தான்” எனத் தெரிவிக்கப்பட்டது.
நீதிபதி பரத் குமார் கூறுகையில், “உங்கள் தலைவர் விஜய்யை நீங்கள் தமிழக முதல்வர், மற்ற அரசியல் கட்சித் தலைவருடன் ஒப்பிட வேண்டாம். அவர் ஒரு டாப் ஸ்டார். அவரைக் காண அதிகப்படியான இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் வருவார்கள். கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர் தான் வருவார்கள் என்று நீங்கள் கணித்ததே தவறு. வார விடுமுறை, காலாண்டு விடுமுறையை கணித்து நீங்கள் வேறு இடம் தான் தேர்வு செய்திருக்க வேண்டும்.” என்றார்.
இருதரப்பு வாதங்களைத் தொடர்ந்து கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் விபி மதியழகன் மற்றும் தவெக தொண்டர் பவுன் ராஜ் ஆகியோரை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT