Published : 30 Sep 2025 09:40 AM
Last Updated : 30 Sep 2025 09:40 AM
கரூர்: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில் யாரையும் குற்றம்சாட்ட விரும்பவில்லை என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். கரூரில் தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எல்.முருகன் ஆகியோர் நேற்று ஆறுதல் கூறினர். மேலும், சம்பவம் நடைபெற்ற வேலுசாமிபுரத்துக்கு சென்று பார்வையிட்டனர்.
பின்னர், ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருவோருக்கும் ஆறுதல் கூறுவதற்காக பிரதமர் மோடி எங்களை இங்கு அனுப்பி வைத்தார். அதன்படி, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினோம். இதில் பலர் பேசக்கூட முடியாத அளவுக்கு துக்கத்தில் உள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் ஏழை மக்கள்.
இந்த சம்பவத்தில் எந்த கட்சியையும் குறிப்பிட்டுப் பேச விரும்பவில்லை. யாரையும் குற்றம் சாட்டவும் விரும்பவில்லை. நாட்டில் இதுபோன்ற சம்பவம் இனி எங்கும் நிகழக் கூடாது. இங்கு பார்த்த விஷயங்களை பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரிடம் தெரிவிப்போம்.
உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இதற்காக பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களை அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டுள்ளோம். அவர்களும் உடனடியாக அனுப்புவதாக தெரிவித்துள்ளனர். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் எம்எல்ஏ உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT