Published : 30 Sep 2025 05:53 AM
Last Updated : 30 Sep 2025 05:53 AM
சென்னை: தவெக பரப்புரையில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும் என அதிமுக, பாஜக, பாமக கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: கரூரில் நடந்த உயிரிழப்பு சம்பவத்துக்கு மக்களின் உணர்வாக மக்களின் சந்தேகங்களை பதிவு செய்திருந்தேன். அதற்கு உரிய பதில் அளிக்க திராணி இல்லாமல், சமூக வலைதளங்களில் அவதூறு பரவுவதாக கூறியிருக்கும் முதல்வரின் போட்டோஷூட் வீடியோவே, தமிழகத்துக்கு வாய்த்திருக்கும் முதல்வர் எப்படிப்பட்டவர் என்பதற்கு சாட்சி.
காவல்துறை பிரச்சாரம் செய்ய ஒதுக்கிய இடத்தில் குளறுபடிகள், திமுகவின் வழக்கமான ஆம்புலன்ஸ் அரசியல், தடியடி நடந்த காட்சிகள் இவை எல்லாம் வதந்தியா? கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட கள்ளச்சாராய மரணங்களுக்கு கனக்காத இதயம், கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா, இதில் இன்னும் கொடுமையாக முதல்வர் அமைத்த ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரிக்கும் காட்சிகள் ஊடகங்களில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.
அதைப் பார்க்கும் மக்களுக்கே, இது ஒருதலைபட்சமான அரசின் தவறுகளை மூடி மறைக்கும் கண்துடைப்பு ஆணையம் என்பதைக் காட்டுகிறது. எனவே கரூர் துயரத்துக்கான உரிய நீதி கிடைக்க சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: கரூர் உயிரிழப்பு விவகாரத்தில், காவல்துறையின் செயல்பாடுகள் சந்தேகத்தை எழுப்புகின்றன. காவல்துறையினர் நினைத்திருந்தால் விஜய் பரப்புரைக்கு கூடுதல் பரப்பளவுள்ள இடத்தை ஒதுக்கியிருக்கலாம். கூடுதலாக வருபவர்களை நகரத்துக்குள் நுழைய விடாமல் தடுத்திருக்கலாம். ஆனால், இதை செய்யாதது தான் விபத்துக்கு வழி வகுத்ததாக தெரிகிறது.
ஆனால், விசாரணை தொடங்கும் முன்பே செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல்துறை தங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. அனைத்துத் தவறுகளும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது தான் என்று குற்றம்சாட்டியிருக்கிறது. பின் எப்படி விசாரணையை நியாயமாக நடத்த முடியும், இதனால் மரணங்களின் பின்னணியில் உள்ள மர்மங்கள் மூடி மறைக்கப்படும். எனவே, சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.
தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத்: உயிரிழப்பு சம்பவத்தில் கண்துடைப்புக்காக திமுக அரசு நியமித்துள்ள முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குறுகிய கால விசாரணை அறிக்கையால் எந்தவித பயனும் ஏற்படாது. எனவே தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும்.
குறிப்பாக இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் முழு கவனம் செலுத்தி வெளிப்படைத் தன்மையுடன் தமிழக அரசு செயல்பட வேண்டும். இதேபோல் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோரும் கரூரில் நடந்த உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT