Last Updated : 29 Sep, 2025 04:41 PM

2  

Published : 29 Sep 2025 04:41 PM
Last Updated : 29 Sep 2025 04:41 PM

யாரையும் குறைகூற வரவில்லை; மக்கள் சொன்னதை மத்திய அரசிடம் சொல்வோம்: கரூரில் நிர்மலா சீதாராமன் பேட்டி

கரூரில் நிர்மலா சீதாராமன் | படங்கள் ஆர்.செல்வ முத்துக் குமார்

கரூர்: ‘குடிக்க தண்ணீர்கூட கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை, பகல் 12 மணி முதல் காத்திருந்தோம். குழந்தைகளுடன் சென்று சிக்கிக்கொண்டோம், வெளியில் கூட வர முடியவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் கூறினார்கள்’ என கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின்னர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கரூரில் நேற்று முன் தினம் தவெக தலைவர் விஜய் மேற்கொண்ட பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தச் சூழலில், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், தவெக கூட்டம் நடைபெற்ற கரூர் வேலுசாமிபுரத்திற்கும் அவர் நேரில் சென்று பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், “உயிரிழந்த சிலரின் குடும்பத்தினரை நான் நேரில் சந்தித்தேன். அவர்களின் கதறலைக் கேட்டு ஆறுதல் கூட சொல்ல முடியவில்லை. அந்த துக்கத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. ஒரு வீட்டுக்கு வாழ்வாதாரமாக இருந்தவர்களே உயிரிழந்துள்ளனர். இதுபோல ஒரு சம்பவம் இனி நம் நாட்டில் எங்கும் நிகழக் கூடாது. காயமடைந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் கூறியதை பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் கூறுவேன்.

மக்களை சந்தித்து ஆறுதல் கூற மட்டுமே வந்துள்ளேன். இந்த சம்பவம் குறித்தோ அல்லது விசாரணை குறித்தோ வேறு எதையும் இப்போது என்னால் சொல்ல முடியாது. சாதாரண அப்பாவி மக்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க பிரதமர் உத்தரவிட்டார். இந்த பணம் பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

பிரதமர் வர முடியாத சூழலில் என்னையும், மத்திய இணையமைச்சர் எல்.முருகனையும் அனுப்பியுள்ளார். பாதிக்கப்பட்டோரிடம் பேசியபோது, எதிர்பார்த்ததை விட கூட்டம் மிக அதிகமாக இருந்தது, பலர் கட்டிடங்கள், மின் கம்பங்கள் மீதிருந்து விழுந்ததாக சொன்னார்கள்.

குடிக்க கூட தண்ணீர் கிடைக்கவில்லை, உணவு கிடைக்கவில்லை, பகல் 12 மணி முதல் காத்திருந்தோம். குழந்தைகளுடன் சென்று சிக்கிக்கொண்டோம், வெளியில் கூட வர முடியவில்லை என பாதிக்கப்பட்ட மக்கள் என்னிடம் கூறினார்கள். மக்கள் எங்களிடம் சொன்னதை நாங்கள் மத்திய அரசிடம் சொல்வோம். மத்திய அரசின் சார்பில் வந்துள்ளோம். கட்சி சார்பில் யாரையும் குற்றஞ்சாட்ட, விமர்சிக்க வரவில்லை.” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x