Published : 29 Sep 2025 03:59 PM
Last Updated : 29 Sep 2025 03:59 PM
சென்னை: ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு இந்த நிகழ்வில் குற்றச்சாட்டப்பட்டுள்ள தமிழகக் காவல்துறையினரே இந்த வழக்கின் புலன் விசாரணையை நடத்தக் கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த விவகாரத்தில் காவல்துறையின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது, இந்த பரிதாப மரணங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களை குழி தோண்டி புதைக்க சதி நடக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது. அப்பாவி மக்கள் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அதன் பின்னணியில் உள்ள மர்மங்களை மறைக்கத் துடிப்பது கண்டிக்கத்தக்கது.
கரூர் நெரிசல் உயிரிழப்புகளுக்கான உண்மையான காரணம் என்ன? என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், அந்த பிரச்சாரக் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள், காவல்துறையினர், பிரச்சாரக் கூட்டத்திற்கு வந்தவர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடமைகளை மறந்து பொறுப்பின்றி செயல்பட்டது தான் இந்த விபத்துக்குக் காரணம் என்று பாட்டாளி மக்கள் கட்சி குற்றஞ்சாட்டி வருகிறது. குறிப்பாக காவல்துறை மீது தான் அதிக குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன.
காவல்துறையினர் நினைத்திருந்தால் கரூரில் நடிகர் விஜய் பரப்புரை செய்வதற்கு கூடுதல் பரப்பளவுள்ள இடத்தை ஒதுக்கியிருக்கலாம்; எதிர்பார்க்கப்பட்டதை விட அதிக கூட்டம் கூடிய நிலையில் கூடுதலாக வருபவர்களை நகரத்திற்குள் நுழைய விடாமல் தடுத்து அனுப்பியிருக்கலாம்.
ஆனால், இவை எதையும் காவல்துறை செய்யாதது தான் விபத்துக்கு வழி வகுத்ததாகக் கூறப்படுகிறது. கூட்டம் நடைபெற்ற பகுதிக்கு தொடர்பே இல்லாமல் அவசர ஊர்திகள் வந்தது போன்று கரூர் கூட்ட நெரிசல் விபத்துக்குப் பின்னணியில் சில சதிகளும் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டுள்ளன.
இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா? என்பது புலன் விசாரணையில் தான் தெரியவரும். ஆனால், விசாரணை தொடங்குவதற்கு முன்பாகவே கரூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காவல்துறையின் சட்டம் - ஒழுங்குப் பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர், காவல்துறை மீது எந்தத் தவறும் இல்லை; அனைத்துத் தவறுகளும் கூட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் மீது தான் என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
தமிழக காவல்துறையின் உயர்பதவியில் இருப்பவரே இவ்வாறு கூறிவிட்ட நிலையில், மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் நிலையில் உள்ள விசாரணை அதிகாரியால் காவல்துறை மீதான குற்றச்சாட்டுகள் குறித்து எவ்வாறு நியாயமான விசாரணை நடத்த முடியும்.
காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் என்ன கூறினாரோ, அதை வலுப்படுத்தும் வகையில் தான் விசாரணை நகரும். அப்படி நடந்தால் இந்த பரிதாப மரணங்களின் பின்னணியில் உள்ள மர்மங்களும், ஏதேனும் சதி இருந்தால் அதுவும் மூடி மறைக்கப்படும். அது நல்லதல்ல.
ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் உலுக்கிய கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். அதற்கு இந்த நிகழ்வில் குற்றச்சாட்டப்பட்டுள்ள தமிழகக் காவல்துறையினரே இந்த வழக்கின் புலன் விசார்ணையை நடத்தக் கூடாது. எனவே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT