Published : 29 Sep 2025 03:40 PM
Last Updated : 29 Sep 2025 03:40 PM
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், முதலுதவி சிகிச்சை முறையை பரவலாக்கும் நோக்கில் மத்திய, மாநில பாடத்திட்டங்களில் முதலுதவியை ஒரு பாடமாக வைக்க வேண்டும் என்று பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக எஸ்.ஆர். சேகர் வெளியிட்டுள்ள சமூக ஊடக பதிவில், "கரூர் கூட்ட நெரிசல் மரணத்தில் உயிரிழந்த 41 பேரில் 39 பேர் இறந்தே மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். இதற்குக் காரணம் அவர்களுக்கு அங்கு முதலுதவி தரப்படவில்லை அல்லது முதலுதவி தெரிந்த ஆட்கள் இல்லை.
விபத்து நடந்த பிறகு முதல் ஒரு மணி நேரம் என்பது "கோல்டன் ஹவர்" என்றழைக்கப்படுகிறது. ஏனெனில், அந்த நேரத்தில் கொடுக்கப்படும் சிகிச்சை உயிரைக் காப்பாற்றும் அல்லது காயங்களோடு தப்பிக்க வைக்கும்.
இதற்கு முதலுதவி பற்றிய பயிற்சி, மருத்துவர்கள், செவிலியர்கள் தவிர மற்ற யாருக்கும் நம் நாட்டில் சொல்லிக்கொடுக்கப்படுவதில்லை அல்லது கற்றுக் கொள்வதில்லை.
முதலுதவி பற்றிய பயிற்சி பெற்றவர்கள் அங்கு இருந்திருப்பார்களேயானால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாகக் காப்பாற்ற அவர்கள் முயன்றிருப்பார்கள். ஒருவேளை 39 பேரையுமேகூட காப்பாற்றி இருக்க முடியும்.
எனவே, முதலுதவி தொடர்பான விழிப்புணர்வு புத்தகத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கி, மத்திய மாநில பாடத்திட்டங்களில் முதலுதவியை ஒரு பாடமாக மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT