Published : 29 Sep 2025 01:08 PM
Last Updated : 29 Sep 2025 01:08 PM
சென்னை: கரூரில் 41 பேர் உயிரிழந்த கோர சம்பவத்தில் அரசியல் சதி இருக்கிறதா என தமிழக மக்கள் கேட்கும் கேள்விக்கு விடை காண சிபிஐ விசாரணையை முதல்வர் ஸ்டாலின் அறிவிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூரில் நடந்த தவெக பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான கோர சம்பவத்தில் கண்துடைப்புக்காக திமுக அரசு நியமித்துள்ள முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான குறுகிய கால அவகாச விசாரணை ஆணையத்தின் அறிக்கையால் எந்தவித பயணம் ஏற்படாது என்பதால், தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உடனடியாக சிபிஐ விசாரணையை அறிவிக்க வேண்டும்.
மிக முக்கியமாக இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனை செய்வதில் தமிழக அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும். நீதிமன்ற தீர்ப்புகளின் அடிப்படையில் பிரேத பரிசோதனை செய்யும்போது முழுமையாக வீடியோ எடுக்கப்பட வேண்டும் என்பதை தமிழக அரசு பின்பற்றியுள்ளதா என்பதை தெரிவிக்க வேண்டும். பிரேத பரிசோதனை மற்றும் அதன் அறிக்கைகளில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்பட வேண்டும்.
தமிழக வெற்றி கழகத்தின் நீதிமன்ற மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து, அதாவது இந்த கோர சம்பவத்தில் உள்ளூர் அரசியல்வாதிகளின் சதி இருக்கிறதா? என்பது குறித்து பாரபட்சமில்லாமல் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மின் வாரியம், உள்ளாட்சி நிர்வாக அதிகாரிகள், உள்ளூர் தாசில்தார் என அனைவரிடமும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
முன்னதாக, கரூர் டிஎஸ்பி செல்வராஜ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமிக்கப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு ஆறுதல் கூறியதாக கூறப்பட்டாலும், திமுக அரசோடு இணக்கமாகச் செல்லுங்கள் இல்லையென்றால் பின் விளைவுகள் ஏற்படும் என்று விஜய் மிரட்டப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே, இது குறித்து நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும், தமிழக காவல்துறையும் ராகுல் காந்தியிடமும் விசாரணை நடத்த வேண்டும்.
கரூர் கோர சம்பவத்தின் பின்னணியில் அரசியல் சதி உள்ளது, உள்ளூர் நபர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள் என்ற தமிழக வெற்றி கழகத்தின் குற்றச்சாட்டுகளை நீர்த்துப் போகச் செய்யும் வகையில், விஜய்க்கு, ராகுல் காந்தி மறைமுக அழுத்தம் கொடுத்து வருவதை தமிழக பாஜக விரைவில் அம்பலப்படுத்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT