Published : 29 Sep 2025 12:51 PM
Last Updated : 29 Sep 2025 12:51 PM
சென்னை: கரூரில் பாதிக்கப்பட்டோரை விஜய் சந்திக்காதது குறித்து கேள்விக்கு, “தம்பி போகலைன்னா என்ன? அண்ணன் நான் தான் சென்றேனே?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்தார்.
சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த சீமான், “இப்போது எங்களுடன் மின் துறை அமைச்சர் வந்தார். அவர், மின்கம்பத்தில் தொண்டர்கள் ஏறும்போது தவெகவினர்தான் மின்சாரத்தை துண்டிக்குமாறு சத்தம் போட்டனர் என்றும், சிலர் ஜெனரேட்டரில் ஏறி விழுந்ததில் காலில் அடிப்பட்டது என்றும் அவர் சொன்னார். விஜய் வருவதற்காக நீண்ட நேரம் ஆனது. காலை 8 மணி முதலே காலை உணவு, மதிய உணவு, குடி தண்ணீர் இல்லாமல் காத்திருந்துள்ளனர். அதனால் ஒரு மயக்க நிலைக்கு வந்துள்ளனர். கூட்டத்திலிருந்து வெளியே செல்லலாம் என்றாலும், நெரிசலைக் கடந்து செல்ல முடியவில்லை என்று சொல்கின்றனர். அதுபோலத்தான் பலர் சிக்கிக்கொண்டனர்.
எதிர்க்கட்சி தலைவர் கூட்டம் நடத்திய இடத்தில்தான் தவெக கூட்டத்துக்கு அனுமதி கொடுத்ததாகவும், விஜய் குறித்த நேரத்துக்கு வரவில்லை என்றும், 10 ஆயிரம் பேர்தான் வருவார்கள் என்று சொன்னதாகவும் காவல்துறை கூறுகிறது. ஆனால், தவெக தரப்பில் தாங்கள் வேறு இடம் கேட்டதாக சொல்கின்றனர். ஆனால், இழப்பு ஏற்பட்டுவிட்டது. இனிவரும் காலங்களில் இதுபோல தவறு நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
விஜய் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்காமல் சென்றது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த சீமான், “அந்த நேரத்தில் அவரின் மனநிலை என்னவாக இருந்திருக்கும் என யோசிக்க வேண்டும். பதற்றமாகவும், என்ன செய்வதென தெரியாத ஒரு தடுமாற்றத்திலும் இருந்திருக்கலாம். இது அனைவருக்கும் உள்ளதுதான், இதனை ஒரு குறையாக சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அவர் போகலைன்னா என்ன, நாங்கள் எல்லாம்தான் சென்றோமே?. தம்பி போகலைன்னா என்ன? அண்ணன் நான் தான் சென்றேனே?. அவரும் போவார்” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT