Published : 29 Sep 2025 11:46 AM
Last Updated : 29 Sep 2025 11:46 AM
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், அன்றைய தினம் நடந்தவை குறித்து நேரில் பார்த்தவர்கள் விவரித்தவை...
உயிரிழந்த கிருத்திக் உடன்பிறவா சகோதரர் சஞ்சய் (18): “நான், எனது சித்தி சந்திரகலா, அவரது மகன் கிருத்திக் அனைவரும் விஜயின் தீவிர ரசிகர்கள். விஜயை பார்க்க வேண்டும் என்பதற்காக தான் கூட்டத்துக்கு போயிருந்தோம். கூட்ட நெரிசலில் நான், எனது சித்தி, கிருத்திக் ஆகியோர் சிக்கிக் கொண்டோம்.
ஒருவழியாக நாங்கள் இருவரும் உயிர் தப்பினோம். ஆனால் கிருத்திக் மூச்சுத் திணறி இறந்துவிட்டார். அவரது மரணத்துக்கு காரணம் காவல் துறைதான். 500 போலீஸார் பாதுகாப்பு என்றார்கள். 50 போலீஸார் கூட அங்கு இல்லை. போலீஸார் இருந்திருந்தால் உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம்.”
உயிரிழந்த ஸ்ரீநாத் வகுப்புத் தோழன் பூபாலன்: “நாங்கள் கரூர் சேரன் பள்ளியில் படித்து வந்தோம். நேற்று முன்தினம் நாங்கள் அனைவரும் தடகள போட்டிக்கு தயார் செய்வதற்காக அகாடமி சென்று விட்டோம். ஸ்ரீநாத் விஜயின் தீவிர ரசிகர். அதனால் விஜயை பார்க்க சென்றிருக்கிறார். அங்கு கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்திருக்கிறார். இது குறித்த தகவல் எங்களுக்கு சற்றுமுன் தான் கிடைத்தது. அதனால் ஸ்ரீநாத்தின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்கலாம் என்பதற்காக நண்பர்கள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து வந்தோம். ஆனால், அவரது சடலத்தை தான் பார்க்க முடிந்தது.”
வேலுசாமிபுரம் சுப்பிரமணி (டீ வியாபாரி) - “கரூர் வேலுசாமிபுரத்தில் விஜய் பிரச்சாரத்தின்போது அங்கிருந்த இளைஞர்கள் வேப்ப மரத்தில் ஏறினர். மரம் உடைந்து சாக்கடையில் விழுந்தனர். அப்போது அங்கிருந்தவர்கள் சாக்கடையில் விழுந்தவர்களை மிதித்து கொண்டு ஓடினர். இதனால் பலரும் மேலே வரமுடியாமல் சாக்கடையில் சிக்கி உயிரிழந்தனர்.”
வேலுசாமிபுரம் சாந்தி: “இங்கு காலையில் இருந்தே கூட்டம் அதிகமிருந்தது. 10 மணிக்குப் பிறகு பேருந்துகள் நிறுத்தப்பட்டன. குழந்தைகளுடன் வந்த சிலரை கண்டித்தபோது, அவர்கள் அதை கண்டுகொள்ளவே இல்லை. விஜய் வந்து பேசத் தொடங்கியவுடன் அங்கிருந்த கூரை மீது 10-க்கும் மேற்பட்டோர் ஏறினர். சிறிது நேரத்தில் அவர்கள் கீழே விழுந்தனர். இதில் படுகாயமடைந்து சிலர் உயிரிழந்தனர்.”
பாலாஜி: “சம்பவ இடத்தில் காலை முதலே கூட்டம் கூட தொடங்கியது. விஜய்யின் வாகனம் நெருங்க நெருங்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. பிரச்சாரத்துக்கு விஜய் 3 மணி அளவில் வந்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது.”
பிரபாகரன்: “நகருக்கு வெளிப்புறத்தில் பெரிய இடத்தில் கூட்டத்துக்கு அனுமதி தந்திருக்க வேண்டும். கூட்டம் அதிகம் இருந்ததால் விஜய்யின் வாகனம் கரூர் பைபாஸ் சாலையையும் அடைய முடியவில்லை. அதனால், அவரது வாகனம் ஊருக்கு உள்ளே வர வேண்டியதானது. அவரது வாகனத்தோடு சேர்ந்து ஒரு கூட்டம் உள்ளே வந்தது. அதே நேரத்தில் மேற்கு பக்கத்தில் இருந்தும் கூட்டம் அதிகம் வந்திருந்தது. நிச்சயம் ஊருக்கு வெளியில் நடந்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்காது.
விஜய்யை பார்க்க வேண்டுமென குழந்தைகள் விரும்புகிறார்கள். நம் ஊர் பக்கம் வருவதால் குழந்தைகளுக்கு காட்டி விட்டு செல்லலாம் என நானும் வந்தேன். களத்தில் காவலர்களும் இருந்தனர். ஆனால், அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. விஜய் இங்கிருந்து சென்ற பிறகுதான் நடந்த சம்பவமே தெரிய வந்தது.”
கவிதா, காமாட்சி: “கூட்டம் அதிகம் இருந்தது. விஜய் வருவதற்கு சரியாக அரை மணி நேரத்துக்கு முன்பாக கூட்டம் அதிகமானது. விஜய் வந்ததும் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். பல பேர் இடமில்லாமல் தோட்டத்துக்குள் சென்று மயங்கிய நிலையில் படுத்திருந்தனர். யாருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் பலர் மயக்கமடைந்தனர்.”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT