Published : 29 Sep 2025 09:33 AM
Last Updated : 29 Sep 2025 09:33 AM
கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ள நிலையில், இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் மனதை உலுக்கும் பின்னணி இது...
2 வயது பாலகன்: கரூர் வேலுசாமிபுரம் வடிவேல் நகரை சேர்ந்த கூலித்தொழிலாளி விமல் (25). இவரது மனைவி மாதேஸ்வரி (22). பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடுள்ளவர். இவர்களது ஒரே மகன் குரு விஷ்ணு. ஒரு வயது 10 மாதம். சம்பவத்தன்று விமலின் சகோதரி லல்லி, அவரது கணவர் பசுபதி (32) ஆகியோர் தங்கள் குழந்தைகளுடன், குரு விஷ்ணுவையும் கூட்டத்துக்கு அழைத்துச் சென்றனர்.அப்போது கூட்ட நெரிசலில் லல்லியின் கையில் இருந்து நழுவி கீழே விழுந்த குரு விஷ்ணு, கூட்டத்தில் மிதிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து லல்லி கூறியது: விஜய் பேசத் தொடங்கியபோது, திடீரென ஏற்பட்ட மின்வெட்டு மற்றும் மைக்கில் ஏற்பட்ட கோளாறு காரணமாக கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டது. இதனால், திடீரென மனித சுனாமி எழுந்ததுபோல மக்கள் அங்குமிங்கும் ஒருவரை ஒருவர் முட்டித் தள்ளினார்கள். இதில், என் கையிலிருந்து குழந்தை நழுவி விழுந்தது. அவனை மீட்க முயன்றும் முடியாமல், அவனை இழந்துவிட்டோம் என்று கூறி கதறி அழுதார்.
தாயுடன் சென்ற 2 சிறுமிகள் உயிரிழப்பு: கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்தவர் பெருமாள். நிலத்தரகர். இவரது மனைவி செல்வராணி. தையல் தொழிலாளி. இவர்களுக்கு 3 மகள்கள், ஒரு மகன். வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் விஜயை பார்ப்பதற்காக செல்வராணி தனது 2-வது மகள் கோகிலா(14), 3-வது மகள் பழனியம்மாள்(11) ஆகியோரை அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சம்பவ இடத்திலேயே 2 மகள்களும் இறந்துவிட்டனர். படுகாயமடைந்த செல்வராணி, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று திரும்பினார். உயிரிழந்த சிறுமிகள் இருவரும் ரெட்டிப்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு, 3-ம் வகுப்பு படித்து வந்தனர். இவர்களின் மறைவுக்கு இப்பள்ளியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் ஆசிரியர்களும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
மனைவி, 2 மகள்களை இழந்து நிர்கதியாய் நிற்கும் கணவர்: கரூர் வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக 5 சிறுமிகள், 5 சிறுவர்கள், 16 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்தனர். இதில், கரூர் தாந்தோணி அருகே விஸ்வநாதபுரியைச் சேர்ந்த ஆனந்தஜோதி மனைவி ஹேமலதா (28), மகள்கள் சாய் லக்ஷனா(9), சாய் ஜீவா(5) என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். மனைவி, 2 குழந்தைகளை இழந்த ஆனந்தஜோதி, நிர்கதியாய் நிற்கிறார்.
ஒரே ஊரை சேர்ந்த 5 பேர் பரிதாப மரணம்: சோகத்தில் மூழ்கியது ஏமூர் புதூர்: கரூர் வேலுசாமிபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பதற்காக, கரூர் அருகே உள்ள ஏமூர் புதூரை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் அந்த ஊரைச் சேர்ந்த டாஸ்மாக் மேற்பார்வையாளர் சக்திவேல் மனைவி பிரியதர்ஷினி(35), மகள் தாரணிகா(14) ஆகியோர் உயிரிழந்தனர்.
இதேபோல, ஏமூர் புதூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி சந்திரா (40), காளியப்பன் மனைவி அருக்காணி (60), சரவணன் மகன் கிருத்திக் (7) ஆகியோரும் நெரிசலில் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் மனைவி, மகளை பறிகொடுத்துவிட்டு அனாதையாக நிற்பதாக கூறி கண்ணீர் விட்டு கதறி அழுத சக்திவேல் கூறும்போது, ‘‘விஜயின் கூட்டத்துக்கு எனது மனைவி, மகளை அனுப்பி வைத்தது மாபெரும் தவறு’’ என்றார். கரூரில் ஒரே கிராமத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் அக்கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அடுத்த மாதம் நிச்சயதார்த்தம் இளம் ஜோடிக்கு நேர்ந்த கதி: கரூர் வேலுசாமிபுரத்தை சேர்ந்த ஐடி நிறுவன ஊழியர் எம்.ஆகாஷ் (26). உப்பிடமங்கலத்தைச் சேர்ந்தவர் எஸ்.கோகுலஸ்ரீ(27). தனியார் கல்லூரி கவுரவ விரிவுரையாளர். இவர்கள் இருவருக்கும் அடுத்த மாதம் திருமணம் நிச்சய தார்த்தமும், ஜனவரி மாதம் திருமணமும் நடத்த குடும்பத்தினர் திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில் இளம்ஜோடி இருவரும், கோகுல ஸ்ரீயின் சகோதரர் பிரபாகரனுடன் தவெக பிரச்சாரத்தில் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். அதற்கு சிறிது நேரத்துக்கு முன் அவர்கள் இருவரையும் பிரபாகரன் தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். அந்தப் படத்தை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது நெஞ்சை பிழியும் வகையில் இருந்தது.
உயிரிழந்த 40 பேர் விவரம்
1. தாமரைக்கண்ணன்(25), த/பெ முருகேசன், பாகநத்தம், கரூர்.
2. ஹேமலதா(28), க/பெ ஆனந்த்ஜோதி, விஸ்வநாதபுரி, கரூர்
3. சாய்லெட்சனா(8), த/பெ ஆனந்த்ஜோதி. விஸ்வநாதபுரி. கரூர்
4. சாய்ஜீவா(4), த/பெ ஆனந்த்ஜோதி, விஸ்வநாதபுரி, கரூர்
5. சுகன்யா(33), க/பெ தேவேந்திரன், வடிவேல்நகர், கரூர்
6. ஆகாஷ்(23), த/பெ மாணிக்கம், காமராஜ்புரம், கரூர்
7. தனுஷ்குமார்(24), த/பெ இளங்கோவன், காந்திகிராமம், கரூர்
8. வடிவழகன்(54), த/பெ முத்துசாமி, பசுபதிபாளையம், கரூர்
9. ரேவதி(52), க/பெ முருகேசன், கொடுமுடி, ஈரோடு.
10. சந்திரா(40), க/பெ செல்வராஜ், ஏமூர் புதூர், கரூர்.
11. குரு விஷ்னு(2), த/பெ விமல், வடிவேல் நகர், வேலுசாமிபுரம், கரூர்.
12. ரமேஷ்(32), த/பெ பெருமாள், கோடங்கிபட்டி, கரூர்.
13. சனுஜ்(13), த/பெ ரகு, காந்திகிராமம், கரூர்.
14. ரவிகிருஷ்ணன்(32), த/பெ மருதாசலம், எல்.என்.எஸ் கிராமம், கரூர்.
15. பிரியதர்ஷ்ணி(35), க/பெ.சக்திவேல், ஏமூர், கரூர்.
16. தரணிகா(14), த/பெ சக்திவேல், ஏமூர், கரூர்.
17. பழனியம்மாள்(11), த/பெ பெருமாள், வேலுசாமிபுரம், கரூர்.
18. கோகிலா(14), த/பெ பெருமாள், வேலுசாமிபுரம், கரூர்.
19. மகேஷ்வரி (45), க/பெ சக்திவேல், மண்மங்கலம், கரூர்
20. அஜிதா(21), த/பெ மணி, தொக்குப்பட்டி, அரவக்குறிச்சி.
21. மாலதி(36), க/பெ கிருஷ்ணமூர்த்தி, ராயனூர் வடக்கு, கரூர்.
22. சுமதி(50), க/பெ மணி, 80 அடி ரோடு,கரூர்.
23. மணிகண்டன்(33), த/பெ பாலாஜி, தீர்த்தம்பாளையம், வெள்ளக்கோவில்.
24. சதீஷ்குமார் (34), த/பெ துரைசாமி, கொடுமுடி, ஈரோடு.
25. கிருத்திக்யாதவ்(7), த/பெ சரவணன். 5 ரோடு, கரூர்.
26. ஆனந்த்(26), த/பெ முருகன், சுக்காம்பட்டி, சேலம்.
27. சங்கர் கணேஷ்(45), த/பெ பால்ராஜ், வடக்கு தாளிபட்டி, குஜிலியம்பாறை.
28. விஜயராணி(42), க/பெ சக்திவேல், தாழைப்பட்டி, கரூர்.
29. கோகுலபிரியா(28), க/பெ ஜெயபிரகாஷ், செம்மாண்டபாளையம், வெள்ளகோவில்.
30. பாத்திமா பானு(29), க/பெ பிரபாகரன், கொள்ளப்பட்டி, ஒட்டன்சத்திரம்.
31. கிஷோர் (17), த/பெ கணேஷ், வடக்கு காந்திகிராமம், கரூர்.
32. ஜெயா(55), க/பெ சுப்பிரமணி, வெங்கமேடு, கரூர்.
33. அருக்காணி(60), ஏமூர், கரூர்.
34. ஜெயந்தி(43), க/பெ சதீஷ்குமார், வேலாயுதம்பாளையம், புகளூர்.
35. கோகுலஸ்ரீ (எ) சவுந்தர்யா(27), உப்பிடமங்கலம், கரூர்
36. ஸ்ரீநாத்(16), புதுக்காம்பள்ளி வீரக்கல் புதூர், மேட்டூர்.
37. மோகன்(19), ஜம்பை, பவானி, ஈரோடு.
38. பிரித்திக்(10), த/பெ பன்னீர்செல்வம், தாந்தோணிமலை, கரூர்.
39. பிருந்தா (22), புதுப்பட்டி சேந்தமங்கலம் அரவக்குறிச்சி.
39. கிஷோர் (18), த/பெ கணேஷ், காந்தி கிராமம், கரூர்.
40. கவின்(34), தொழிற்பேட்டை, கரூர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT