Published : 29 Sep 2025 10:28 AM
Last Updated : 29 Sep 2025 10:28 AM
நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளராக கப்பச்சி டி.வினோத் இருக்கிறார். ஒரு காலத்தில், முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனின் சிஷ்யகோடியாக இருந்தவர். அப்படிப்பட்ட தனது சிஷ்யரை குருவே வீழ்த்த வியூகம் வகுத்து வருவது தான் நீலகிரி மாவட்ட அதிமுக-வில் இப்போது ஹாட் நியூஸ்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் 2 தொகுதிகளை தற்போது திமுக கூட்டணி தான் கைக்குள் வைத்திருக்கிறது. ஆனாலும் இந்த மாவட்டத்தை இன்னமும் அம்மாவின் கோட்டை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் அதிமுக-காரர்கள். இந்தச் சூழலில், இந்தத் தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் சீட் போட்டு இடம்பிடிக்க அதிமுக தலைகள் இப்போதே வடம்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். அதில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் புத்திசந்திரன்.
இவர் தான் முன்பு நீலகிரி மாவட்டச் செயலாளராக இருந்தார். 2011-ல் உதகமண்டலம் தொகுதியில் போட்டியிட்டு வென்ற இவரை முதலில் சுற்றுலாத்துறைக்கும் பிறகு உணவுத் துறைக்கும் அமைச்சராக்கினார் ஜெயலலிதா. ஆனால், அதிகாரம் தூள்பறந்ததாலோ என்னவோ ஐந்தே மாதத்தில் புத்திசந்திரனை அமைச்சரவையிலிருந்து நீக்கினார்.
நீலகிரி மாவட்ட அதிமுக-வில் அதிகாரப் புள்ளியாக புத்திசந்திரன் இருந்த போது 2001-ல் அதிமுக-வுக்கு புதிய வரவாக வந்தவர் கப்பச்சி டி.வினோத். அந்த வகையில் இவரது அரசியல் வழிகாட்டியே புத்திசந்திரன் தான். 2008-ல் இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் சேர்க்கப்பட்ட வினோத், அடுத்த ஆண்டே அந்த அமைப்பின் நீலகிரி மாவட்டச் செயலாளராக ஜெயலலிதாவால் அங்கீகரிக்கப்பட்டார். அதிலிருந்தே அண்ணனுக்கு ஏறுமுகம் தான்.
இந்த நிலையில் தான், புத்திசந்திரன் 2011-ல் அமைச்சரானார். ஆனால், மிகவும் குறுகிய காலத்திலேயே அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்ட புத்திசந்திரனை அப்படியே ஓரங்கட்டினார் ஜெயலலிதா. 2016-ல் மீண்டும் உதகமண்டலம் தனக்குக் கிடைக்கும் என நினைத்தார் புத்திசந்திரன். ஆனால், அவரை தவிர்த்துவிட்டு அவரது சிஷ்யகோடியான கப்பச்சி டி.வினோத்துக்கு சீட் கொடுத்த ஜெயலலிதா, புத்திசந்திரனிடம் இருந்த மாவட்டச் செயலாளர் பதவியையும் பறித்து வினோத்திடமே கொடுத்தார்.
அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த புத்திசந்திரன், இப்படி தொடர் சரிவுகளை சந்தித்த நிலையில், அவரது சிஷ்யரான கப்பச்சி டி.வினோத் அசுர வளர்ச்சி கண்டார். புத்திசந்திரனோ கட்சி நிகழ்ச்சிகளுக்குக் கூட வர மனமில்லாமல் ஒதுங்கியே இருந்தார். இந்த நிலையில், அதிகாரம் தனது கைக்கு மாறியதும் அதிமுக-வின் அமைப்புச் செயலாளர்களில் ஒருவராக புத்திசந்திரனையும் உட்காரவைத்தார் இபிஎஸ்.
இதையடுத்து, இப்போது மாவட்டச் செயலாளர் பதவியும் மீண்டும் அவரது கைக்கே வந்து சேரும் என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள் புத்திசந்திரனுக்கு நெருக்கமானவர்கள். அதேபோல், இம்முறை உதகமண்டலம் தொகுதி எடப்பாடியார் தயவில் மீண்டும் தனக்குக் கிடைக்கும் என மலைபோல் நம்பிக்கொண்டிருக்கிறார் புத்திசந்திரன். அதே நம்பிக்கையுடன் மீண்டும் அதிமுக மேடைகளில் தென்பட ஆரம்பித்திருக்கிறார்.
அண்மையில் உதகையில் நடந்த அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் புத்திசந்திரனை திடீரென பார்த்தவர்கள் ஆச்சரியப்பட்டுப் போனார்கள். இதனைத் தொடர்ந்து, எடப்பாடியாரின் உதகை பிரச்சாரப் பயணச் செலவுகளுக்காக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு புத்திசந்திரன் தன்னால் முடிந்ததைச் செய்து கொடுத்ததாகச் சொல்கிறார்கள். இதையெல்லாம் கூட்டிக் கழித்து ஒரு கணக்குப் போடும் அதிமுக-வினர், “அண்ணன் மீண்டும் உதகைக்கு அச்சாரம் போடுகிறார்” என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
அவர்கள் சொல்வதற்கேற்ப, எடப்பாடியாரின் உதகை பிரச்சாரப் பயணத்தின் போது நடுநாயகமாக வந்து கலந்துகொண்ட புத்திசந்திரன், விவசாயிகள், வியாபாரிகள் உடனான கலைந்துரையாடல் கூட்டத்தில் எடப்பாடியார் அமர்ந்திருந்த மேடையில் கப்பச்சி டி.வினோத்துக்கு அருகிலேயே இடம்பிடித்து அமர்ந்திருந்தார். இதனால், இத்தனை நாளும் பாராமுகமாக இருந்த குருவும் சிஷ்யரும் வேறு வழியில்லாமல் முகம்கொடுத்து பேசவேண்டிய சூழலும் ஏற்பட்டது.
எடப்பாடியார் தனது பிரச்சாரப் பயணத்துக்கு நடுவே, அதிமுக கூட்டணியில் இம்முறை குன்னூர் தொகுதி பாஜக-வுக்கும் உதகை மற்றும் கூடலூர் தொகுதிகள் அதிமுக-வுக்கும் ஒதுக்கப்படலாம் என சூசகமாக சொல்லிச் சென்றிருக்கிறார். இதையடுத்து குருவும் சிஷ்யரும் உதகைக்காக கோதாவில் குதிக்க ஆயத்தமாகி வருகிறார்கள்.
இதுகுறித்து புத்திசந்திரனிடம் கேட்டபோது, “கருத்துக்கூற விரும்பவில்லை” என நழுவினார். கப்பச்சி டி.வினோத்தோ, “2026 சட்டப் பேரவை தேர்தலில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதிகளிலும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வது எனது கடமை” என்று மட்டும் சொன்னார். கப்பச்சி டி.வினோத் வெளியில் இப்படிச் சொன்னாலும் புத்திசந்திரனின் திடீர் புறப்பாடு உள்ளுக்குள் அவரது உறக்கத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் உதகை அதிமுக-காரர்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT