Published : 29 Sep 2025 05:30 AM
Last Updated : 29 Sep 2025 05:30 AM
சென்னை: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், விஜய் சுற்றுப்பயணம் தற்காலிகமாக தள்ளிவைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சென்னையில் விஜய் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கரூரில் விஜய் பிரச்சாரத்தின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த நிலையில், நேற்றுமுன் தினம் இரவு 11 மணிக்கு அவர் சென்னை திரும்பினார். அவருக்கு ஆதரவாக நேற்று முன்தினம் இரவு ஏராளமான தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வீட்டின் முன் போராட்டம் நடத்துவதற்காக பல்வேறு அமைப்புகளும் வரவுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இந்நிலையில், நேற்று விஜய் வீட்டை முற்றுகையிடுவதற்காக வந்த மாணவர் அமைப்பினர் 20-க்கும் மேற்பட்டோரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும், விஜய் வீடு அமைந்திருக்கும் பகுதியில் தடுப்புகள் அமைத்து, அவ்வழியே வருவோரை தீவிர விசாரணைக்குப் பின்னரே அனுமதிக்கின்றனர்.
இதற்கிடையில், விஜய் வீட்டுக்கு மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் நேற்று வந்தனர். ஏற்கனவே விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக சிஆர்பிஎஃப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதேபோல, பனையூரில் விஜய் கட்சி அலுவலகத்துக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் சம்பவத்தையடுத்து விஜய் தனது சுற்றுப்பயணத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 2 அல்லது 3 வாரங்களுக்கு சுற்றுப்பயணத்தை தள்ளிவைத்திருப்பதாகவும், அதுகுறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவிப்பு வெளியிட்ட உள்ளதாகவும் தவெக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT