Published : 29 Sep 2025 01:11 AM
Last Updated : 29 Sep 2025 01:11 AM
கரூர்: கரூரில் தவெக பிரச்சாரத்தின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை என ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறினார்.
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆட்சியர் மீ.தங்கவேல், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம், மின்வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி ஆகியோர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். அப்போது, ஆட்சியர் மீ.தங்கவேல் கூறும்போது, “கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேரும் சடலமாகத்தான் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். மயங்கி விழுந்தவர்களில் ஒருவர் உயிரிழந்ததால், உயிரிழப்பு எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 80 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.
ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கூறியதாவது: கரூரில் பிரச்சாரம் மேற்கொள்ள லைட்ஹவுஸ் முனை பகுதியை முதலில் தவெகவினர் கேட்டனர். அங்கு பெட்ரோல் பங்க், அமராவதி ஆறு உள்ளதாலும், நெருக்கடியான இடம் என்பதாலும் அனுமதி வழங்கவில்லை. உழவர்சந்தை பகுதியும் குறுகலான பகுதி என்பதால் அனுமதி வழங்கவில்லை. வேலுசாமிபுரத்தில் ஏற்கெனவே வேறு கட்சி பிரச்சாரம் செய்ததால் அந்த இடம் வழங்கப்பட்டது. கூட்டம் அதிகமான இடங்களில் 50 பேருக்கு ஒருவர் வீதம் பணியில் அமர்த்தப்படுவார். கரூரில் 20 பேருக்கு ஒருவர் என ஒரு எஸ்.பி, 4 ஏடிஎஸ்பி, டிஎஸ்பிகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸார் என 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மற்ற இடங்களைவிட அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
வேலுசாமிபுரத்தில் நடந்த பரப்புரையின்போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. தவெக தலைவரின் வாகனம் கரூர் மாவட்டம் தளவாபாளையத்தில் இருந்து திருகாம்புலியூர் ரவுண்டானா வர 2 மணி நேரமாகியது. சாதாரணமாக 30 நிமிடங்களில் அந்த இடத்தைக் கடந்துவிடலாம். சிறிது நேரம் வாகனத்திலிருந்து வெளியே வந்த தவெக தலைவர், பின்னர் உள்ளே சென்றுவிட்டார். இதனால், அங்கிருந்தவர்களுக்கு அவரை பார்க்கும் ஆர்வம் அதிகரித்தது.
அதீத கூட்டத்தால் பிரச்சார இடத்துக்கு முன்பே வாகனத்தை நிறுத்தி பிரச்சாரம் செய்யும்படி போலீஸார் கூறியுள்ளனர். ஆனால், அந்த அறிவுறுத்தலை ஏற்காமல், திட்டமிட்ட இடத்திலேயே பிரச்சாரம் மேற்கொண்டனர். சம்பவ இடத்தில் இருந்த போலீஸார் கேட்டுக்கொண்டதாலேயே 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டன. கூட்டம் காரணமாக ஆம்புலன்ஸ்கூட உள்ளே செல்ல முடியவில்லை. அனுமதிகேட்ட நேரத்தைவிட 4 மணி நேரம் தாமதமாகவே பிரச்சாரத்தை தொடங்கினார். அதிக கூட்டம் கூடும்போது அரசியல் கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மின்சாரம் துண்டிக்கப்படவில்லை: மின் வாரிய தலைமைப் பொறியாளர் ராஜலட்சுமி கூறும்போது, “விஜய் பிரச்சாரத்தின்போது மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. விஜய் வருவதற்கு முன்பு டிரான்ஸ்பார்மரிலும், மரத்திலும் சிலர் ஏறியதால் மின்சாரத்தை துண்டித்து, காவல் துறை மூலம் அவர்களை கீழே இறக்கிய பின்னர் மீண்டும் மின் விநியோகம் செய்யப்பட்டது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT