Published : 28 Sep 2025 07:10 PM
Last Updated : 28 Sep 2025 07:10 PM
கரூர்: ‘யார் மீதும் நான் பழிபோட விரும்பவில்லை, இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை. இதில் யாரும் சதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யாரின் கட்சி என்பதை தாண்டி அனைவரும் தமிழக மக்கள். தமிழக மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு தமிழக முதல்வர். அவர்களின் மக்களை எதிர்த்து அவர்களே சதி செய்யும் அவசியம் கிடையாது’ என திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “நேற்று கரூரில் 20 பேருக்கு ஒரு போலீசார் என பாதுகாப்பு அளித்துள்ளனர். தவெக நிர்வாகிகளுடன் கலந்து பேசிவிட்டுத்தான் இடத்தையும் தேர்வு செய்துள்ளார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள் என்று மீண்டும் மீண்டும் சொல்கிறார்கள். பிரதமரோ, முதல்வரோ ஒரு அரசு நிகழ்ச்சிக்கு சென்றால் அதற்கு அரசு பொறுப்பு. ஆனால், அவர்கள் கட்சி நிகழ்ச்சிக்கு சென்றால், அந்த கட்சியே பொறுப்பேற்க வேண்டும்.
பாதுகாப்புதான் அரசும், காவல்துறையும் வழங்க முடியும். ஆனால், கூட்டத்தில் பங்கேற்க எத்தனை பேர் வருகிறார்கள், அவர்களுக்கான தண்ணீர், உணவு போன்றவற்றை கட்சியின் நிர்வாகமே பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ எல்லா கட்சிகளுக்கும் நிர்வாகமும், காவல்துறையும் கட்டுப்பாடுகளை விதிப்பது வழக்கமானது. எனவே மக்கள் பாதுகாப்புக்காகவே கட்டுப்பாடுகள் விதிக்கிறார்கள்.
கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்லும்போது, அந்த கட்சியின் தலைவரிடம் முன்கூட்டியே வாகனத்தை நிறுத்த காவல்துறை அறிவுறுத்தல் வழங்கும். அவர்களும் ஏற்றுக்கொள்வார்கள். காவல்துறை வழங்கிய கட்டுப்பாடுகளை அரசியல் தலைவர்கள் கடைபிடிக்க வேண்டும். தங்களுக்காக வரக்கூடிய மக்களின் பாதுகாப்பை பற்றி கவலைப்பட வேண்டியது அரசியல் கட்சி தலைவர்கள்தான்.
யார் மீதும் நான் பழிபோட விரும்பவில்லை, இதில் அரசியல் செய்ய விரும்பவில்லை. இதில் யாரும் சதி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. யாரின் கட்சி என்பதை தாண்டி அனைவரும் தமிழக மக்கள். தமிழக மக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பு தமிழக முதல்வர். அவர்களின் மக்களை எதிர்த்து அவர்களே சதி செய்யும் அவசியம் கிடையாது. இதுபோன்ற கீழ்த்தரமான, காழ்ப்புணர்வு கொண்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்ல விரும்பவில்லை” என்றார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT