Published : 28 Sep 2025 04:43 PM
Last Updated : 28 Sep 2025 04:43 PM
கரூர்: ‘இது கூட்ட நெரிசலில் நடந்த ஒரு துயர சம்பவம். இதனை ஒரு விபத்தாக மட்டுமே சொல்லமுடியும். இதில் யாரும் அரசியல் ஆதாயத்தோடு செயல்படுவதோ, கருத்து சொல்வதோ பொருத்தமானது இல்லை. இதில் அரசியல் விளையாட்டு தேவையில்லை என்பது என் கருத்து' என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரூர் மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெறும் 11 பேரை நேரில் சந்தித்தோம். 65 வயது மதிக்கத்தக்க சுகுணா என்பவர் கவலைக்குரிய நிலையில் உள்ளார். அவருக்கு செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற 10 பேர் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளார். மேலும் இங்கே சிகிச்சை பெறும் பலரையும் சந்தித்தோம்.
தமிழகத்தில் எத்தனையோ தலைவர்கள், லட்சக்கணக்கான மக்களை திரட்டி கூட்டம் நடத்தியுள்ளார்கள். அப்போதெல்லாம் நிகழாத ஒன்று, முதல்முறையாக தமிழக அரசியல் வரலாற்றில் நடந்தேறியிருப்பது கவலையளிக்கிறது. இதனை கேள்விப்பட்டவுடனே கரூர் வந்து ஆறுதல் சொல்லியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். அவரின் விரைவான நடவடிக்கை ஆறுதல் அளிப்பதாக உள்ளது. உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நிதியுதவியை அதிகப்படுத்தி வழங்க வேண்டும்.
இது கூட்ட நெரிசலில் நடந்த ஒரு துயர சம்பவம். இதனை ஒரு விபத்தாக மட்டுமே சொல்லமுடியும். இதற்கு உள்நோக்கம் கற்பிக்கின்ற முயற்சி, அரசியல் ஆதாயம் கருதி செய்வதாகவே கருத வேண்டியுள்ளது. இதில் யாரும் அரசியல் ஆதாயத்தோடு செயல்படுவதோ, கருத்து சொல்வதோ பொருத்தமானது இல்லை. விஜய்தான் இதற்கு காரணம் என சொல்வதோ, போலீஸார்தான் காரணம் என சொல்வதோ பிரச்சினைகளை திசை திருப்பவே உதவும். பாதிக்கப்பட்டோருக்கு உதவாது. இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பதற்கும் அது உதவாது. இதில் அரசியல் விளையாட்டு தேவையில்லை என்பது என் கருத்து” எனத் தெரிவித்தார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT