Last Updated : 28 Sep, 2025 04:36 PM

1  

Published : 28 Sep 2025 04:36 PM
Last Updated : 28 Sep 2025 04:36 PM

பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய்யோ, தவெகவினரோ முதலுதவி செய்யவில்லை - சிபிஎம் குற்றச்சாட்டு

சென்னை: விஜய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நெரிசலில் உயிர் பலி ஏற்பட்ட நிலையில் அவரோ, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளோ பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த முதலுதவியும் செய்யவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் செப்.27ம் தேதி கரூரில் மேற்கொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 10 குழந்தைகள், 17 பெண்கள் உட்பட 35-க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியான துயரச் சம்பவம் அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதுடன் இந்தியாவையே உலுக்கியுள்ளது.

மேலும், 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக செய்திகள் உள்ளன. இந்த நெரிசலில் சிக்கி பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். படுகாயமுற்று சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு உயர் தர மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்.

இந்தியாவில் இதுவரை அரசியல் பிரச்சார நிகழ்வின் போது ஏற்பட்ட நெரிசலில் இந்த அளவு பெரும் எண்ணிக்கையில் உயிர் பலி நிகழ்ந்த தில்லை. இனியும் இதுபோன்று நடக்காமல் இருக்க அனைத்து வகையிலும் முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

த.வெ.க. சார்பில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி கோரி நீதிமன்றத்தை அக்கட்சியினர் அணுகிய போது, பல்வேறு நிபந்தனைகளை சென்னை உயர்நீதிமன்றம் விதித்தது. ஆனால், அந்த விதிமுறைகள் எதையும் அக்கட்சியினர் பின்பற்றவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. கரூருக்கு நண்பகல் 12 மணியளவில் விஜய் வருவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இரவு 7 மணி அளவிலேயே அவர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளார். நீண்ட நேரமாக குடிநீர், உணவு கூட இல்லாமல் மக்கள் காத்திருந்த நிலையில் விஜய் அங்கு வந்தவுடன் கடும் நெரிசல் ஏற்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் மயங்கி விழுந்துள்ளனர்.

விஜய் பேசிக்கொண்டிருக்கும் பொழுதே நெரிசலில் பலி ஏற்பட்ட நிலையில் அவரோ, அவரது கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளோ பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த முதலுதவியும் செய்யவில்லை. மாறாக, விஜய் உடனடியாக சென்னை புறப்பட்டுச் சென்றுள்ளார். அவரது கட்சி நிர்வாகிகளும், மருத்துவமனைக்குக் கூட செல்லவில்லை என்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

பெரும் கூட்டம் கூடும் நிலையில், அவற்றை முறைப்படுத்துவதற்கான எந்த ஒரு முயற்சியும் அக்கட்சி நிர்வாகிகள் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். நீதிமன்றம் பிறப்பித்த விதிமுறைகள் கறாராக பின்பற்றப் படுகிறதா என்பதை காவல்துறையும் உறுதி செய்திருக்க வேண்டும்.

இச்சம்பவம் குறித்து அறிந்தவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் நெரிசலில் சிக்கி காயமடைந்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டதோடு அமைச்சர்களையும் அங்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளார். அவரும் இரவோடு இரவாக கரூர் சென்று உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்ததோடு, காயமடைந்து சிகிச்சை பெறுவோர்களையும் சந்தித்தது சரியான நடவடிக்கையாகும். தமிழக அரசின் சார்பில் உடனடியாக உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கும், காயமடைந்தோருக்கும் நிவாரணமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த துயர சம்பவம் குறித்து விசாரிக்க தமிழக அரசின் சார்பில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டுள்ளது. இந்த ஆணையம் குறிப்பிட்ட காலத்திற்குள் விரைவாக விசாரித்து, நடந்த கோர நிகழ்வுகள் குறித்து மட்டுமின்றி எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் எதுவும் நடைபெறாமல் இருக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளை வழங்கும் என்று நம்புகிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் கே.சாமுவேல் ராஜ், திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சச்சிதானந்தம், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை மற்றும் மாவட்ட தலைவர்கள் உடனடியாக கரூருக்கு சென்று உயிரிழந்தோரின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளனர்” என்று பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x