Last Updated : 28 Sep, 2025 04:26 PM

3  

Published : 28 Sep 2025 04:26 PM
Last Updated : 28 Sep 2025 04:26 PM

கரூர் கூட்ட நெரிசல்: உள்ளூர் மக்கள் சொல்வது என்ன?

கரூர்: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், கரூரில் வேலுசாமிபுரத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் சனிக்கிழமை அன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதில் 40 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், கரூர் - வேலுசாமிபுரத்தில் நேற்று (செப்.27) காலை முதலே விஜய்யின் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்கும் விதமாக தவெக உறுப்பினர்கள், விஜய்யின் ரசிகர்கள் மற்றும் மக்கள் என அதிகமானோர் அங்கு திரண்டனர். இரவு 7 மணி அளவில் பிரச்சார கூட்டத்துக்கு பேருந்தில் வந்த விஜய், தனது பேச்சை பேருந்தின் மேற்புறம் நின்றபடி தொடங்கினார். அவர் பேசியபோது ஆம்புலன்ஸ் வாகனங்கள் சில சென்றன. அதோடு விஜய் பேசும்போதே சிலருக்கு தண்ணீர் தேவைப்பட்டதால், பேருந்துக்கு மேல் இருந்தபடி அதை அவரும், அவருடன் இருந்தவர்களும் வழங்கியிருந்தனர்.

பின்னர் தனது உரையை முடித்துக்கொண்டு விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். அதன் பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கியவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இதில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் தவெக-வினரின் கொண்டாட்ட களமாக இருந்த வேலுசாமிபுரம் இப்போது படுகளமாக காட்சி அளிக்கிறது. நெரிசலில் சிக்கியவர்களின் காலணிகள், கைப்பைகள், கைக்கடிகாரங்கள், கண் கண்ணாடிகள், கட்சியின் துண்டுகள் அங்கு சிதறிக் கிடக்கின்றன.

உள்ளூர் மக்கள் சொல்வது என்ன? - “சம்பவ இடத்தில் காலை முதலே கூட்டம் கூட தொடங்கியது. விஜய்யின் வாகனம் நெருங்க நெருங்க கட்டுக்கடங்காத கூட்டம் கூடியது. பிரச்சாரத்துக்கு விஜய் 3 மணி அளவில் வந்திருந்தால் இந்த அசம்பாவிதம் நடந்திருக்காது” என கரூரை சேர்ந்த பாலாஜி என்பவர் தெரிவித்துள்ளார்.

“நகருக்கு வெளிப்புறத்தில் பெரிய இடத்தில் கூட்டத்துக்கு அனுமதி தந்திருக்க வேண்டும். கூட்டம் அதிகம் இருந்ததால் விஜய்யின் வாகனம் கரூர் பைபாஸ் சாலையையும் அடைய முடியவில்லை. அதனால் அவரது வாகனம் ஊருக்கு உள்ளே வர வேண்டியதானது. அவரது வாகனத்தோடு சேர்ந்து ஒரு கூட்டம் உள்ளே வந்தது. அதே நேரத்தில் மேற்கு பக்கத்தில் இருந்தும் கூட்டம் அதிகம் வந்திருந்தது. நிச்சயம் ஊருக்கு வெளியில் நடந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது.

விஜய்யை பார்க்க வேண்டுமென குழந்தைகள் விரும்புகிறார்கள். நம் ஊர் பக்கம் வருவதால் குழந்தைகளுக்கு காட்டி விட்டு செல்லலாம் என நானும் வந்தேன். களத்தில் காவலர்களும் இருந்தனர். ஆனால், அவர்களால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. விஜய் இங்கிருந்து சென்ற பிறகுதான் நடந்த சம்பவமே தெரிய வந்தது” என கரூரை சேர்ந்த பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

“கூட்டம் அதிகம் இருந்தது. அவர் வருவதற்கு சரியாக அரை மணி நேரத்துக்கு முன்பாக கூட்டம் அதிகமானது. விஜய் வந்ததும் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். பல பேர் இடமில்லாமல் தோட்டத்துக்குள் சென்று மயங்கிய நிலையில் படுத்திருந்தனர். யாருக்கும் தண்ணீர் கிடைக்கவில்லை. அதனால் பலர் மயக்கமடைந்தனர்” என கவிதா மற்றும் காமாட்சி ஆகியோர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x