Published : 28 Sep 2025 12:48 PM
Last Updated : 28 Sep 2025 12:48 PM
சென்னை: கரூர் உயிரிழப்புக்கு காரணமான நடிகர் விஜய், தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தமிழக பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக பாஜகவின் மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்த கூட்டத்தில், அதிமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் தள்ளுமுள்ளு ஏற்பட்டு பலர் மயக்கமடைந்த நிலையில் 39 பேர் உயிரிழந்துள்ள விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் தமிழக அரசு ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். அதற்கான தொகையை தமிழக வெற்றி கழகம், தமிழக அரசுக்கு உடனடியாக வழங்க வேண்டும். இது அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒரு பாடமாக முன் உதாரணமாக இருக்க வேண்டும்.
காவல் துறைக்கு பொறுப்பு அமைச்சராக உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அரசியல் நாகரிகத்துடன் தார்மிக பொறுப்பேற்று உடனடியாக காவல்துறை பொறுப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும். தமிழக காவல் துறைக்கு தனி அமைச்சர் நியமிக்கப்பட வேண்டும். மேலும், கரூர் மாவட்டத்தின் ஐ.ஜி, டி.ஐ.ஜி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்டவர்கள் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும்.
திருச்சியில் நடைபெற்ற தமிழக வெற்றி கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் குறித்தும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மூச்சு விட கூட முடியாமல் துன்பப்பட்டு பாதிக்கப்பட்டது குறித்தும் தெரிவித்து, இதுபோல் மீண்டும் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையத்துக்கும் தமிழக முதல்வருக்கும் தமிழக பாஜக சார்பில் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி கடிதம் எழுதப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகம் உள்பட எந்தவொரு அரசியல் கட்சியும் பிரச்சாரம் நடத்த அனுமதி கேட்கும்போது, தேர்தல் ஆணையம் வகுத்துள்ள சட்ட திட்டங்களின்படி முறையான, உறுதியான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும், குழந்தைகள் கலந்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது என்று அந்த கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டது. ஆனால், திமுக அரசின் அலட்சியம் மற்றும் ஆணவப் போக்கால் பாஜகவின் ஆலோசனை புறந்தள்ளிப்பட்டது. பாஜகவின் ஆலோசனை புறக்கணிக்கப்பட்டதாலும், முழுமையான நிர்வாக சீர்கேடு காரணமாகவுமே இந்த உயிரிழப்பு நடந்துள்ளது.
முதல்வர் நாற்காலி கனவில், நடிப்பு அரசியலையும் விளம்பர அரசியலையுமே விஜய் செய்து வருகிறார். தன்னுடைய கூட்டத்துக்கு வரும் கட்சிக்காரர்களின் நலன், பாதுகாப்பு குறித்து எந்த விதத்திலும் அவர் அக்கறை கொள்வதில்லை. தவெகவின் விக்கிரவாண்டி பொதுக்கூட்டம், திருச்சி பொதுக்கூட்டம், நாமக்கல் தேர்தல் பிரச்சார கூட்டம் என அனைத்திலும் இது தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டது. நேற்றைய உயிர் இழப்பு சம்பவத்திலும் பாதுகாப்பு குறித்து எந்தவித அக்கறையும் இல்லாமல் செயல்பட்ட விஜய், ஒரு மன்னிக்க முடியாத குற்றவாளி. மனசாட்சியுடன் இதை உணர்ந்து தமிழக மக்களிடம் அவர் பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
தமிழக காவல்துறை உடனடியாக விஜய் மீது வழக்குப் பதிவு செய்து, விஜய் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்விஷயத்தில் தமிழக மக்களின் கண்ணீருக்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் நீதி வழங்கும் வகையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் உறுதியுடன் செயல்பட வேண்டும்.
மேலும், இந்த உயிர் இழப்பு சம்பவத்தில் அரசியல் பின்னணி, அரசியல் சதி இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும். கொங்கு பகுதியின் குறிப்பாக கரூர் மாவட்டத்தின் முடிசூடா மன்னனாக தன்னை அறிவித்துக் கொண்டு எதிர்க்கட்சிகளை எல்லா விதத்திலும் நசுக்கி காட்டுவேன் என்று சூளுரைத்து செயல்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து சமூக வலைதளங்களில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, குறிப்பாக சம்பவம் நடந்த சமயத்தில் நடந்த பவர் கட் அரசியல், ஆம்புலன்ஸ் அரசியல் குறித்து முழுமையாக விசாரணை செய்து தமிழக அரசு தமிழக மக்களின் மனதில் எழுந்துள்ள கேள்விகளுக்கு விடை அளிக்கும் வகையில் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT