Published : 28 Sep 2025 11:14 AM
Last Updated : 28 Sep 2025 11:14 AM
கரூர்: “கரூர் சம்பவத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. அதனால், யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. காவல் துறை தரப்பில் சில அறிவுரைகள் அளிக்கப்பட்டன. அளவுக்கு அதிகமான கூட்டம் வரும்போது சரியான நேரத்துக்கு வந்திருக்க வேண்டும். வாரம்தோறும் சம்பந்தப்பட்ட தலைவர் வருகிறார். அவரிடமும் இது குறித்து கேளுங்கள்” என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அங்கு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். பலர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று (செப்.28) காலை கரூர் வந்து உயிரிழந்தவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். உயிரிழந்த நபர்களின் உறவினர்களுக்கு அவர் ஆறுதல் தெரிவித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது “கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மொத்தம் 39 பேர் உயிரிழந்தனர். அவர்களில் ஆண்கள் 13, பெண்கள் 17 மற்றும் சிறுவர்கள் 9 பேர்.
உயிரிழந்தவர்களில் 32 பேர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். ஈரோடு மாவட்டம் - 2, திருப்பூர் மாவட்டம் - 2, திண்டுக்கல் மாவட்டம் - 2 மற்றும் சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும் உயிரிழந்துள்ளார். 30 பேரின் உடல் உடற்கூறு ஆய்வு பணிகள் முடிக்கப்பட்டு, அவர்களின் உடல் உறவினர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தி, அவர்களின் உறவினர்களுக்கு ஆறுதல் சொல்லி உள்ளோம்.
அரசு தரப்பில் எவ்வளவு ஆறுதல் சொன்னாலும் இந்த இழப்பை ஈடு செய்ய முடியாது. அரசு சார்பாக இயன்ற அனைத்தும் செய்வோம். அவர்களுக்கு உறுதுணையாக அரசு இருக்கும். சிகிச்சையில் இருப்பவர்களின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களிடம் கேட்டறிந்தேன். கரூர் மாவட்டம் மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள், பல்வேறு மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ களத்தில் உள்ளனர். இதற்கு மேல் இழப்பு கூடாது.
இனிமேல் இது மாதிரியான விபத்து கூடாது. அதற்கு இந்த அரசு தேவையான அனைத்து நடவடிக்கையையும் முன்னெடுக்கும். உரிய விசாரணை மேற்கொள்ள விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதியரசர் விசாரணை மேற்கொள்ள இருக்கிறார். அப்போது மக்களுக்கு உண்மை தெரியவரும். அவர் தரும் அறிக்கையின்படி தமிழக முதல்வர் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பார்.
சம்பவம் நடந்த அதே இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட்டம் நடத்தியுள்ளார். போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக டிஜிபி தெளிவான விளக்கம் கொடுத்துள்ளார். இந்த இடத்தில் அரசியல் பேச விரும்பவில்லை. அதனால் யார் மீதும் குற்றம் சொல்ல விரும்பவில்லை.
அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் மக்களை சந்திக்கும் உரிமை உண்டு. அது அவர்களின் ஜனநாயக கடமை. அதை யாரும் தடுக்க முடியாது. காவல் துறை தரப்பில் சில அறிவுரைகள் அளிக்கப்பட்டன. மரத்தின் மேல் ஏற வேண்டாம், மக்களுக்கு இடையூறு செய்ய வேண்டாம் என தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்துவது இரண்டாம் கட்ட தலைவர்களின் பொறுப்பு.
அளவுக்கு அதிகமான கூட்டம் வரும்போது சரியான நேரத்துக்கு வந்திருக்க வேண்டும். வாரம்தோறும் சம்பந்தப்பட்ட தலைவர் வருகிறார். அவரிடமும் இது குறித்து கேளுங்கள்” என்று துணை முதல்வர் உதயநிதி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT