Published : 28 Sep 2025 09:13 AM
Last Updated : 28 Sep 2025 09:13 AM
கரூர்: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 39 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர்களது குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “இந்த பொதுக்கூட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே அங்கு மின்சாரம் நிறுத்தப்பட்டதாகவும், இதனால் அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக நெரிசல் ஏற்பட்டதாகவும் எங்களுக்கு ஊடகங்கள் வாயிலாக தகவல் வந்துள்ளது.
தவெக கூட்டம் நடைபெறுகின்ற போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதே கட்சி இதற்கு முன்னால் 4 பொதுக் கூட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அதையெல்லாம் ஆய்வு செய்து முழுமையாக பாதுகாப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக தொலைகாட்சியை பார்க்கும்போது தெரிந்து கொள்ள முடிகிறது. இந்த கட்சி மட்டுமல்ல, அதிமுக சார்பில் நான் நடத்தும் பயணத்தில் காவல்துறை எங்களுக்கு முழுமையான பாதுகாப்பு தரவில்லை.
இந்த அரசாங்கம் ஒருதலைபட்சமாக நடக்கிறது. ஆளுங்கட்சி, எதிர்கட்சி என்று பார்க்காமல் நடுநிலையோடு நடக்கவேண்டும். அதிமுக ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான போராட்டங்களுக்கு, பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம். ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு கூட்டம் நடத்துவதே சிரமம். நீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற வேண்டிய சூழல் இருக்கிறது. முழுமையான பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் இந்த உயிரிழப்புகளை தவிர்த்திருக்கலாம். அதே போல ஒரு அரசியல் கட்சி தலைவரும் அதை கூர்ந்து கவனித்திருக்க வேண்டும். அவர் சுற்றுப் பயணம் செல்லும் மாவட்டங்களில் என்னென்ன குறைபாடு இருக்கிறது என்று அவரும் ஆலோசனை செய்து முன்னேற்பாடுகளை நடத்தியிருக்க வேண்டும்.
ஒரு பொதுக்கூட்டம் என்றால் ஒரு அரசியல் கட்சியை, அரசாங்கத்தை, காவல்துறையை நம்பித்தான் பொதுமக்கள் வருகிறார்கள். ஒரு நேரத்தை அறிவித்துவிட்டு பலமணி நேரம் கழித்து வரும்போது அதில் சில பிரச்சினைகள் ஏற்படத்தான் செய்யும். இதில் நான் யாரையும் குற்றம் சொல்ல விரும்பவில்லை. தமிழகம் மட்டுமின்றி இந்தியாவிலேயே இதுவரை ஒரு அரசியல் கட்சி நடத்திய பொதுக்கூட்டத்தில் இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டதில்லை. இது மிகுந்த வேதனையை தருகிறது. முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்றதை பொறுத்தவரை அரசாங்கத்தில் இருப்பவர்கள் செய்ய வேண்டியதைத்தான் முதல்வர் ஸ்டாலின் செய்திருக்கிறார். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் இதைத்தான் செய்யும். இது அரசாங்கத்தின் கடமை. அதைத்தான் இந்த அரசும் செய்திருக்கிறது” இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT