Last Updated : 28 Sep, 2025 01:17 AM

20  

Published : 28 Sep 2025 01:17 AM
Last Updated : 28 Sep 2025 01:17 AM

​​​​​​​“அவர்கள் கூறியது 10 ஆயிரம் பேர், ஆனால் வந்ததோ 27 ஆயிரம்” - பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தகவல்

சென்னை: தவெக பிரச்சாரக் கூட்டத்துக்கு 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்று அனுமதி கோரப்பட்ட நிலையில், அங்கு 27 ஆயிரம் பேர் வந்ததாக பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் தெரிவித்தார்.

இதுகுறித்து பொறுப்பு டிஜிபி வெங்கடராமன் கூறியதாவது“கரூரில் நடந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தற்போது வந்த தகவல்களின் அடிப்படையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38. அதில் ஆண்கள் 12, பெண்கள் 16, குழந்தைகள் 10. இந்த சம்பவம் குறித்து தெரிந்தவுடன் காவல்துறை சார்பாக ஆலோசனை நடத்தி சம்பவ இடத்துக்கு 2000 போலீஸார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் திருச்சியிலும், திருவாரூரிலும், நாகையிலும் வந்த கூட்டத்தை மனதில் வைத்துதான் அவர்கள் கேட்டதை விட பெரிய இடமாக இருக்கும் என்றுதான் இந்த இடத்துக்கு காவல்துறை அனுமதி கொடுத்தது. இதே இடத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு ஒரு மாநில கட்சி பரப்புரை செய்திருக்கிறது. அவர்கள் சொன்னது 10 ஆயிரம் பேர் வருவார்கள் என்பதாக. ஆனால் வந்ததோ 27 ஆயிரத்துக்கு மேல். அதை முன்கூட்டியே மனதில் வைத்துதான் 500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நண்பகல் 12 மணிக்கு விஜய் வருவார் என்று தவெக தலைமைக் கழக சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 11 மணி முதலே கூட்டம் சேரத் தொடங்கியது. ஆனால் அவர் வந்ததோ இரவு 7.40 மணிக்கு. காலையிலிருந்து அங்கே காத்திருந்த மக்களுக்கு சரியான முறையில் உணவு, தண்ணீர் கிடைக்கவில்லை. இதில் யாரையும் குறை சொல்லமுடியாது.

அவர் வரும்போதே கூட்டம் பின்னாலேயே வந்துகொண்டிருந்தது. ஊருக்குள் போலீஸார் மிகவும் கஷ்டப்பட்டு கூட்டத்தை அழைத்து வந்தனர். இதனை விஜய்யும் குறிப்பிட்டு போலீஸாருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இப்போது இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று டிஜிபி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x