Published : 27 Sep 2025 10:32 PM
Last Updated : 27 Sep 2025 10:32 PM
கரூர்: தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழந்தனர். சுமார் 25-க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். “கரூரில் நடந்த சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது கவலை அளிக்கிறது. இந்த கடுமையான சூழ்நிலையில் நாம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆதரவாக இருப்போம்.
கரூர் மாவட்டம் மற்றும் பக்கத்து மாவட்டத்தை சார்ந்த சகோதரர்கள் அனைவரும் உடனே மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவியை செய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நாமெல்லாம் ரத்த தானம் செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ரத்தம் தேவைப்படலாம். ஆதரவு தேவைப்படலாம்.
சிகிச்சை பெற்றுக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக் கூடாது என்பது எனது பிரார்த்தனையாக இருக்கிறது” என அவர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT