Published : 27 Sep 2025 10:25 PM
Last Updated : 27 Sep 2025 10:25 PM
திருச்சி: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தவெக தலைவர் விஜய் பதில் ஏதும் அளிக்காமல் சென்றார்.
தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் குழந்தைகள் பெண்கள் உட்பட ஏராளமானோர் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி 31 பேர் உயிரிழந்தனர். மேலும் 58 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கரூரில் தனது பிரச்சாரம் முடிந்த கையோடு திருச்சி சென்ற விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலம் சென்னை செல்வதற்காக திருச்சி விமானம் நிலையம் சென்றடைந்தார். அங்கே கூடியிருந்த செய்தியாளர்கள் விஜய்யின் காரை சூழ்ந்து கொண்டு அவரிடம் கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் குறித்து கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் விஜய் அவர்களின் கேள்விகள் எதற்கும் பதிலளிக்காமல் சென்றுவிட்டார்.
இந்த விபத்துக்கு பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT