Last Updated : 27 Sep, 2025 08:51 PM

3  

Published : 27 Sep 2025 08:51 PM
Last Updated : 27 Sep 2025 08:51 PM

கரூரில் விஜய் பிரச்சார கூட்ட நெரிசலில் 31 பேர் உயிரிழப்பு: குழந்தைகள் உள்பட 25 பேருக்கு தீவிர சிகிச்சை

கரூர்: தவெக தலைவர் விஜய்யின் கரூர் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் காரணமாக 31 பேர் உயிரிழந்தனர். குழந்தைகள், பெண்கள் உள்பட 25-க்கும் மேற்பட்டோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தத் தகவலை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி செய்தார்.

தவெக தலைவர் விஜய் இன்று இரவு 7 மணியளவில் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவர் பரப்புரை மேற்கொண்ட வேலுச்சாமிபுரத்தில் ஆயிரகணக்கானோர் திரண்டிருந்தனர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் காரணமாக மக்கள் பலர் மயக்கமடைந்தனர். விஜய் பேசிக்கொண்டிருந்த போதே மயக்கமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில், விஜய் பரப்புரையில் மயக்கமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தது. தற்போது கரூர் அரசு மருத்துவமனையில் மட்டும் 30-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், சிலர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரூர் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டுள்ளனர். மயக்கமடைந்து சிகிச்சை பெறுபவர்களில் சிலருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கரூர் அரசு மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சியர், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் நேரில் வருகை தந்து, பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தனர்.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவு: இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதள பதிவில், “கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர்
செந்தில் பாலாஜி, மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம், மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு அறிவுறுத்தியுள்ளேன்.

அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸிடமும் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு, விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகைளை மேற்கொள்ள ஏடிஜிபி-யிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள் மருத்துவர்களுக்கும் காவல் துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x