Published : 27 Sep 2025 10:37 AM
Last Updated : 27 Sep 2025 10:37 AM
மாநிலத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தீவிர கட்சி நடவடிக்கைகளில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்த அண்ணாமலை இப்போது திடீரென, கூட்டணியை விட்டு விலகிச் சென்ற தினகரன், ஓபிஎஸ் ஆகியோரை மீண்டும் என்டிஏ கூட்டணியில் இணைக்கிறேன் என்ற பேரில் திடீர் சந்திப்புகளை நிகழ்த்தி பரபரப்பான கருத்துகளை பேச ஆரம்பித்திருப்பது அண்ணாமலை தனி ரூட் எடுக்கிறாரோ என்ற சந்தேகத்தை எழுப்பி இருக்கிறது.
தனிக்கட்சி தொடங்கப் போகிறார், ஓபிஎஸ், டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்டவர்களைச் சேர்த்துக்கொண்டு தவெக உடன் கூட்டணி வைக்க பிளான் போடுகிறார் என்றெல்லாம் அண்ணாமலை குறித்து செய்திகள் பரப்பப்படும் நிலையில், அவரது நகர்வுகளை உற்று நோக்கி வரும் அரசியல் நோக்கர்களோ, “தனிக் கட்சி ஐடியாவெல்லாம் அண்ணாமலைக்கு இல்லை. டெல்லி தலைமை என்ன சொல்லி இருக்கிறதோ அதைத்தான் அவர் இப்போது வேறு ரூட்டில் செய்து கொண்டிருக்கிறார்” என்கிறார்கள்.
இதுகுறித்து இன்னும் விரிவாகப் பேசிய அவர்கள், “தமிழகத்தில் இம்முறை 50 தொகுதிகளுக்கு குறையாமல் பாஜக போட்டியிட வேண்டும் என நினைக்கும் அமித் ஷா, அதற்காகத்தான் தங்களுக்கு 18 சதவீத வாக்கு வங்கி இருப்பதாக முன்கூட்டியே பதிவு செய்து வைத்திருக்கிறார். தங்களுக்கு ஒதுக்கப்படுவதில் 10 தொகுதிகளை டிடிவி-க்கும் ஓபிஎஸ்ஸுக்கும் தருவது பாஜக-வின் பிளான்.
அந்த 50 இடங்களை பெறுவதற்காகவே ஒரு பக்கம், நயினார் நாகேந்திரனையும் இன்னொரு பக்கம், அண்ணாமலையையும் களத்தில் இறக்கி இருக்கிறார்கள் டெல்லிவாலாக்கள். பழனிசாமியை தங்கள் பிடிக்குள் வைத்திருக்க தினகரனும் ஓபிஎஸ்ஸும் பாஜக-வுக்கு தேவை. அதனால், அவர்களை இழுத்து நிறுத்தும் வேலையை அண்ணாமலைக்கு கொடுத்திருக்கிறது டெல்லி தலைமை.
அதேசமயம், பழனிசாமி தரப்பை தாஜா செய்யும் வேலையை நயினாருக்குக் கொடுத்திருக்கிறது. ஆக, ரெண்டு பக்கமும் அணைபோட்டு தங்களுக்கான டிமாண்டை பூர்த்தி செய்து கொள்வதுதான் பாஜக-வின் திட்டமே” என்றார்கள்.
அதிமுக - பாஜக கூட்டணிக்கு பங்கம் விளைவிப்பதாக அண்ணாமலை மீது அதிமுக-வினர் இன்னமும் ஆத்திரப்பட்டுக் கொண்டிருக்க, சேலத்தில் பழனிசாமியின் சொந்தத் தொகுதியிலேயே அண்ணாமலைக்கு ரசிகர் மன்றம் தொடங்கி இருக்கிறார்கள். தனிமனித துதியை அறவே அனுமதிக்காத பாஜக தலைமை, இதை ரசித்து அனுமதிக்கவே செய்கிறது. அதனால் தான் சேலம் மாவட்ட பாஜக தலைவரை ரசிகர் மன்ற தொடக்க விழாவுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
இதைச் சுட்டிக்காட்டுபவர்கள், “அண்ணாமலையின் அசைவுகளுக்கு பாஜக தலைமையின் அனுக்கிரஹம் இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?” என கேள்வி எழுப்புகிறார்கள்.
பாஜக தலைமையின் விருப்பத்துக்கு மாறாக தனி ரூட் எடுத்தால் அமலாக்கத் துறையும் வருமான வரித்துறையும் என்னவெல்லாம் செய்யும் என்பது அண்ணாமலை அறியாததல்ல. அதனால் அவர் தனிக்கட்சி தொடங்குவதெல்லாம் சாத்தியமில்லை. அதேசமயம், “கடைசி நேரத்தில் கூட கட்சிகள் இடம் மாறலாம்” என அண்மைக் காலமாக அதிமுக தலைவர்கள் பொடிவைத்துப் பேசி வருகிறார்கள்.
அப்படி ஏதாவது காரணத்தைச் சொல்லி கடைசி நேரத்தில் பாஜக-வுக்கு பைபை சொல்லிவிட்டு அதிமுக, விஜய் பக்கம் சாய்வதற்கும் சான்ஸ் இருக்கிறது. அப்படியொரு நிலை வந்தால் அதை சமாளிக்க பாஜக எந்த எல்லைக்கும் போகும். அந்த சமயத்தில் அண்ணாமலை இப்போது எடுக்கும் சில மூவ்களும், செங்கோட்டையன் - தினகரன் சந்திப்புகளும் பாஜக-வுக்கு கை கொடுக்கலாம்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT