Last Updated : 26 Sep, 2025 06:57 PM

13  

Published : 26 Sep 2025 06:57 PM
Last Updated : 26 Sep 2025 06:57 PM

“கல்வி நிகழ்வில் நடிகர்கள் மூலம் விளம்பரம் தேடுகிறது தமிழக அரசு” - நயினார் நாகேந்திரன் விமர்சனம்

திருநெல்வேலி: “தமிழக அரசின் கல்வி நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன்மூலம் அரசு விளம்பரம் தேடுகிறது” என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள நயினார் நாகேந்திரன் இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான கேசவ விநாயகம், பொன்.ராதாகிருஷ்ணன், பொன்.பாலகணபதி உள்ளிட்டோருடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை மேற்கொண்டார். 2 மணி நேரத்துக்கு மேலாக நீடித்த இந்த ஆலோசனையில், டெல்லி சென்று வந்தது, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சி.வி.சண்முகம் ஆகியோரை சந்தித்தது, டிடிவி தினகரனின் கருத்துகள் குறித்து கூட்டத்தில் பேசப்பட்டதாக தெரிகிறது.

இந்தக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியது: ”தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை. கல்வியில் தமிழகம் பின்தங்கியே உள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துவிட்டு விழா நடத்தி அரசு சுய விளம்பரம் செய்துள்ளது. பள்ளிக் கல்வித் துறையில் 4,000-க்கும் காலிப் பணியிடங்கள் உள்ளன. அதை அரசு நிரப்பவில்லை. அரசு சிறப்பாக செயல்படுவதாக வார்த்தைகளில் சொல்லப்படுகிறது. ஆனால், நடைமுறையில் அதுபோன்ற நிலை இல்லை. அரசின் கல்வி நிகழ்ச்சியில் நடிகர்கள், இயக்குநர்கள் கலந்து கொண்டுள்ளனர். இதன் மூலம் அரசு விளம்பரம் தேடுகிறது.

காமராஜர் ஆட்சியை தமிழகத்தில் அமைப்போம் என காங்கிரஸ் கட்சியினர் கூறி வருகிறார்கள். அவ்வாறு ஆட்சி அமைக்க முடியுமா என்பது தெரியவில்லை. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்தை சந்தித்ததில் வியப்பேதும் இல்லை. சென்னையில் இருந்து திருச்சி வரும் வழியில் அவர் வீட்டில் இருப்பதாக அறிந்து நேரில் சென்று சந்தித்தேன்.

கூட்டணி விவரங்களுக்கான பதில் வரும் டிசம்பர் மாதத்துக்குள் கிடைத்துவிடும். கூட்டணியை வைத்து மட்டும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள். கடந்த 2001-ம் ஆண்டில் திமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைத்திருந்தது. ஆனால், அதிமுகவே வென்றது. இதுபோல் 1980 தேர்தலில் திமுக - காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. ஆனால் எம்.ஜி.ஆர். 2-ம் முறை வெற்றி பெற்றார்.

வரும் அக்டோபர் 12-ம் தேதி முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து தொடங்குகிறோம். தொடர்ந்து மதுரையில் இருந்து யாத்திரை நடைபெறுகிறது. அதில் பாஜக தேசியத் தலைவர் நட்டா கலந்து கொள்கிறார்.

திமுக அரசு வேண்டாம் என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டனர். பணம் கொடுத்தாலும் மிகப் பெரிய மாற்றம் வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர். கூட்டணி மாறலாம் என கடம்பூர் ராஜு பேசவில்லை. மற்ற கட்சிகள் கூட்டணிக்கு வரலாம் என்று அவர் பேசியுள்ளார்.

டேவிட்சன் தேவாசீர்வாதம் சட்டம் - ஒழுங்கை கெடுத்து வருகிறார். மது, கஞ்சா, போன்ற போதை பழக்கங்களை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. ஓட்டு வங்கிக்கான அரசாங்கமாக தமிழக அரசு செயல்படுகிறது. விரைவில் இந்த அரசு வீழ்ந்துவிடும்.

நிரந்தர பணி வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதி அளித்துவிட்டு அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் மாறிவிட்டது. ஏமாற்றி ஓட்டு வாங்கிய அரசாக இந்த அரசு உள்ளது. திமுகவை நம்பி காங்கிரஸ் கட்சி இருந்தால் இதைவிட மோசமான நிலைக்கு அக்கட்சி தள்ளப்படும். காங்கிரஸ் கட்சியிலிருந்து பலரை திமுக தங்கள் கட்சிக்கு இழுத்து வருகிறது.

வெளிநாட்டு முதலீடு குறித்த வெள்ளை அறிக்கையை நானும் பலமுறை கேட்டு வந்திருக்கிறேன். வெள்ளை அறிக்கை கேள்வி எழுப்பினால் டிஆர்பி ராஜா வெறும் வெற்றுக் காகிதத்தை காட்டுகிறார். இது ஜனநாயகமற்ற செயல். இந்த அரசாங்கமே வெற்று காகிதம்தான்” என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x