Published : 26 Sep 2025 01:07 PM
Last Updated : 26 Sep 2025 01:07 PM
அரியலூர்: எடப்பாடி பழனிசாமி வெல்லம் வியாபாரத்தை கூட ஒழுங்காக செய்யவில்லை என போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் விமர்சனம் செய்துள்ளார்.
அரியலூர் மாவட்டம், வாரணவாசி அருகே மருதையாற்றின் குறுக்கே ரூ.24.30 கோடி மதிப்பில் தடுப்பணைக் கட்டும் பணிக்கான பூமி பூஜையை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இன்று (செப்.27) தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்: மருதையாறில் தடுப்பணை கட்டி விவசாயிகளுக்கு நீர் திறந்து தர வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2024-ம் ஆண்டு அரியலூர் வருகை தந்தபோது இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த நிகழ்வில் பேசுகின்றபோது, மாவட்ட மக்களும், நான் வைத்த கோரிக்கையேற்று இந்த தடுப்பணை கட்டப்படும் என அறிவித்தார். அதன் பிறகு மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூ.24.30 கோடி மதிப்பில் நிர்வாக அனுமதி பெறப்பட்டு இன்றைய தினம் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட பச்சைமலையிலே உற்பத்தியாகி இங்கு வருகின்றபோது, இடையிலே பல காட்டாறுகளும் சேர்ந்து பெரும் அளவிலே மழைக்காலங்களில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடுகின்ற அந்தத் தண்ணீரைத் தேக்குவதன் மூலம் இந்தச் சுற்றுவட்டத்தில் இருக்கின்ற 400 ஏக்கர் நிலப்பரப்பு நீர் வசதியை, பாசனத்திற்காகப் பெறுகின்ற வாய்ப்பு கிடைக்கும்.
அதேபோல, சுற்றிலும் அமைந்திருக்கின்ற 69 கிணறுகளுடைய நீர்மட்டம் உயரும். ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு நீர்மட்டம் உயரும்போது இந்தப் பகுதியில் இருக்கின்ற ஆழ்துளைக் கிணறுகளில் நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகளுக்குப் பெரும் உறுதுணையாக இருக்கும். கடந்த 2024-ம் ஆண்டு அறிவித்த திட்டம் இந்த 2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அரசாணை வெளியிடப்பட்டதனால், சமீபத்தில் ஒருவர் "இந்தத் திட்டம் நிறைவேற்ற அரசு முன்வரவில்லை" என்று அறிவித்தார்.
அரசு ஒரு திட்டத்தை அறிவிக்கின்றபோது அதற்கான அரசு நடைமுறைகள் இருக்கின்றன. நிதி ஒதுக்கப்படுகின்ற அந்தக் காலகட்டம் எடுத்துக் கொள்ளும். அந்த நிதி ஒதுக்கிய பிறகு அதற்கான அரசாணை வெளியிடப்படும். இது ஒரு அரசின் நடைமுறை. அரசினுடைய நடைமுறை எதுவும் தெரியாமல், அரசினுடைய பணி எதுவும் தெரியாமல், வாய்க்கு வந்த போக்கிலே ஏதோ குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காகச் சொன்ன குற்றத்திற்கு இன்றைக்கு இந்த அடிக்கோல் விழா ஒரு விடையளிக்கின்ற நிகழ்வாக இருக்கிறது.
இதற்குப் பிறகாவது பேசுகின்ற செய்தியினுடைய உண்மைத்தன்மையை, யார் எழுதிக் கொடுத்தாலும், அது வள்ளுவர் சொன்னதுபோல அதனுடைய உண்மைத்தன்மையை அறிந்து பேச வேண்டும்.
எடப்பாடி பழனிசாமி, முதல்வராகட்டும், மற்ற அரசியல் கட்சித் தலைவர்களாகட்டும் அனைவரையும் ஒருமையில் பேசி வருகிறார். அவருடைய தரம் அவ்வளவுதான். அவருடைய கட்சியைச் சேர்ந்தவர்களே அவரைச் சொல்வார்கள், வெல்லம் வியாபாரி என்று. நாங்கள் அப்படிச் சொல்லக் கூடாது என்றுதான் இருந்தோம். வெல்லம் வியாபாரம் செய்பவர்கள்கூட மரியாதையாக எல்லாரிடத்திலும் பேசித்தான் வியாபாரம் செய்வார்கள்.
ஆனால், இவர் அதைக் கூடச் செய்யாமல் வந்திருப்பார் என தெரிகிறது. யாரையும் மதிக்கின்ற போக்கு இல்லாமல் மிகத் துச்சமாக ஒருமையில் பேசுவது என்பது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை நாம் பார்த்திராத மிகத் தாழ்வான நிலையாகும். அந்த நிலைக்கு வந்திருக்கின்ற எடப்பாடியை மக்கள் நிச்சயமாக மன்னிக்க மாட்டார்கள்.
மலைப்பகுதியில் வேன் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே மாதிரி பெரிய பேருந்துகள் இயக்க முடியாத இடங்களில் அதற்கான மாற்று என்ன செய்யலாம் என்ற ஆய்வு நடைபெறுகிறது. அதிலே ஒரு கட்டமாக அதற்கான அறிவிப்புகள் வருகிறது. அடுத்தடுத்த கட்டங்களில் எதிர்பார்க்கலாம்" என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT