Published : 26 Sep 2025 07:17 AM
Last Updated : 26 Sep 2025 07:17 AM
கடலூர்: சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார்.
சிதம்பரத்தில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: ஜிஎஸ்டி வரிகுறைப்பு மாபெரும் புரட்சி என்றும், ஆண்டுக்கு ரூ.2.50 லட்சம் கோடி மீதமாகும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் 4 வகையான உயர்ந்த வரிகளை விதித்து ரூ.55 லட்சம் கோடியை மக்களிடமிருந்து வசூலித்துள்ளனர். பாஜக ஆட்சியில்தான் வரி அதிகமாக்கப்பட்டது. மக்களை 8 ஆண்டுகளாக ஏமாற்றியுள்ளனர்.
கரூரில் காங்கிரஸ் தலைவரை, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுகவில் சேர்த்தது நாகரிகமான செயல் அல்ல. எங்கள் தலைவர் ராகுல், அரசியல் ரீதியாகவும், அரசியலுக்கு அப்பாற்பட்டும் ஸ்டாலினின் சிறந்த நண்பர். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும். அமைச்சரவையில் பங்கு கேட்பது எங்களது உரிமை.
அதற்காக நாங்கள் கூட்டணி மாறிவிடுவோம்; வேறு கூட்டணியில் சேர்ந்து விடுவோம் என்று கூறுவது வதந்தியே. திமுகவினர் எங்கள் நண்பர்கள். அவர்களிடம் நாங்கள் உரிமையைக் கேட்கிறோம். காங்கிரஸுக்கு அதிக வாக்கு வங்கி உள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி அரசியல் பேச வேண்டுமே தவிர, தனி நபர் விமர்சனம் செய்யக் கூடாது. மாநில காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை பற்றி தனி நபர் விமர்சனம் செய்கிறார். எங்களை, திமுகவின் விசுவாசி என்று பழனிசாமி கூறுவது தவறானதாகும்.
தவெகவால் திமுக கூட்டணிக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படாது. எங்களுக்கு 45 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகள் உள்ளன. தவெக வாக்கு சதவீதம் இதுவரை நிருபிக்கப்படவில்லை. அதிமுககூட 20-லிருந்து 23 சதவீதத்துக்கு மேல் இம்முறை வாக்குகளைப் பெற முடியாது. அவர்களுடன் கூட்டு சேருபவர்கள் பலவீனமான நிலையில் உள்ளனர். எனவே, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT