Published : 25 Sep 2025 08:07 PM
Last Updated : 25 Sep 2025 08:07 PM
ஈரோடு: “அதிமுக ஒருங்கிணைப்பு தொடர்பாக பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள். ஒருமித்த கருத்துகள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது கூற இயலாது” என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
அதிமுக முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி ‘அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்க வேண்டும். அந்தப் பணியை 10 நாட்களுக்குள் செய்ய வேண்டும்’ என கெடு விதித்தார். இதையடுத்து அவர் வகித்து வந்த கட்சியின் அமைப்புச் செயலாளர் பொறுப்பு மற்றும் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ஆகியவற்றை கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பறித்து உத்தரவிட்டார்.
இந்தப் பரபரப்பான சூழலலில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி ”மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” பிரச்சார பயணத்தை தொடங்குவதற்காக சேலத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு காரில் கிளம்பி சென்றார். அப்போது ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவினர் வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிப்பதற்காக 2 நாட்களுக்கு முன்பே செங்கோட்டையன் கார் மூலம் சென்னை கிளம்பி சென்றார். இதனால் ஒருங்கிணைப்பு சம்பந்தமாக ஓபிஎஸ், டி.டி.வி.தினகரனை செங்கோட்டையன் சந்திக்க உள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில், சென்னையில் இருந்து திரும்பிய செங்கோட்டையன் கோபிசெட்டிபாளையத்தில் உள்ள தனது இல்லத்துக்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரை பார்ப்பதற்காக சென்னைக்கு சென்று இருந்தேன். சென்னை சென்றவுடன் என்னுடைய சொந்த வேலையை பார்த்துவிட்டு இன்று வீடு திரும்பியிருக்கிறேன்.
சென்னையில் அரசியல் ரீதியாக நான் யாரையும் சந்திக்கவில்லை. அதுபோன்ற தவறான செய்திகள் வந்தவுடன் பல்வேறு தொலைக்காட்சிகளுக்கு இது குறித்து தெரிவித்து இருந்தேன். என்னைப் பொறுத்தவரையில் இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும். அனைவரும் ஒருங்கிணைய வேண்டும் என்ற நோக்கம் மட்டும்தான் இருக்கிறது.
எம்ஜிஆரின் கனவு, ஜெயலலிதா சட்டப்பேரவையில் உரையாற்றும்பொழுது 100 ஆண்டு காலம் இந்த இயக்கம் நிலைத்திருக்கும் என்று கூறினார். அந்தக் கனவை நிறைவேற்றுவதற்கு பல்வேறு தியாகங்களை செய்து தொண்டர்கள் உள்ள இந்த இயக்கத்தை உயிர் மூச்சாக, எல்லோரும் எல்லாம் பெற வேண்டும். இந்த இயக்கம் வலிமை பெற வேண்டும் என இரண்டு நோக்கத்தோடுதான் அன்று எனது கருத்தை தெரிவித்து இருந்தேன்.
என்னை பொறுத்தவரையில் குறிக்கோள் ஒன்றுதான். அந்த குறிக்கோளின் அடிப்படையில் ஒருங்கிணைப்பு குறித்து யாரையும் சந்திக்கவில்லை. அரசியல் ரீதியாக யாரிடமும் நான் பேசவில்லை என்பதை மீண்டும் தெளிவுபடுத்துகிறேன். நல்லது நடக்கும் என்று நம்புகிறேன்” என்று செங்கோட்டையன் கூறினார்.
ஒருங்கிணைப்புப் பணி எந்த அளவில் உள்ளது என்ற கேள்விக்கு, “பல்வேறு நண்பர்கள் என்னிடத்தில் பேசுகிறார்கள். ஒருமித்த கருத்துகள் அவர்கள் மனதில் இருக்கிறது. யார் என்னிடத்தில் பேசினார்கள் என்பது சஸ்பென்ஸ். அதை தற்போது கூற இயலாது. ஆகவே, எல்லோருடைய உள்ளங்களிலும் இருப்பது அதுதான். எல்லோருடைய மனதிலும் ஒன்றிணைந்து வெற்றி பெற வேண்டும் என்ற மனநிலை தான் இருக்கிறது.
ஓபிஎஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் தொடர்பு கொண்டார்களா என்பதை இப்போது சொல்வது சரியாக இருக்காது. யார் பேசினார்கள், யார் பேசவில்லை என்பது இப்போது சொல்வதற்கு வாய்ப்பு இல்லை. நல்லதே நடக்கும் என்று நம்புகிறோம். இப்போதுள்ள சூழ்நிலையில் யாரையும் சந்திப்பதற்கு வாய்ப்பு இல்லை. வாய்ப்பு இருந்தால் உங்களுக்கு தெரிவிக்கிறேன்” என்று செங்கோட்டையன் கூறினார். அதேவேளையில், ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருடன் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளிவந்துள்ளது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT