Published : 25 Sep 2025 08:00 PM
Last Updated : 25 Sep 2025 08:00 PM
சென்னை: “தமிழகத்தை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து மக்களுக்குத் துரோகம் செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவருடைய விசுவாசம் பற்றிப் பேச ஒரு தகுதியும் இல்லை” என்று திமுக எம்.பி ஆ.ராசா காட்டமாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சுந்தரா டிராவல்ஸ் பயணத்தில் நீலகிரி மாவட்டத்தில் பேசும்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகையை தரம் தாழ்ந்து, இழிவுபடுத்திப் பேசியிருப்பது கடும் கண்டத்திற்குரியது. திமுக கூட்டணிக் கட்சிகள் பற்றியும் அதன் தலைவர்கள் பற்றியும் தொடர்ந்து அவதூறுகளை பேசி வருகிறார் எடப்பாடி பழனிசாமி.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையை பிச்சைக்காரர் என்றும், ஒட்டுப்போட்ட சட்டைப் போட்டவர் என்றும் பேசி இருப்பது அநாகரிகத்தின் உச்சம். ஒரு தலைவருக்கு உரிய எந்தப் பண்பும் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை. நாலாந்தரப் பேச்சாளராக மாறி வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வீட்டிற்குப் போய்விட்டு முகத்தை மூடியபடியே காரில் வந்தவர் எல்லாம் ’பிச்சைக்காரன்’ எனப் பேசுவது சரியா?
தன்னுடைய மோசமான பேச்சு, எதிர்வினையை உண்டாக்கும்; பார்வையாளர்களை முகம் சுளிக்க வைக்கும்; வாதப் பிரதிவாதங்களை ஏற்படுத்தும் என நன்கு தெரிந்துதான் வசவு வார்த்தைகளைப் பொதுவெளியில் எந்தத் தயக்கமும் இல்லாமல் பழனிசாமி பேசியிருக்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், அதிமுக கூட்டணிக்கு வருமாறு கட்சிகளுக்கு பழனிசாமி தொடர்ந்து அழைப்பு விடுத்தும் அவரது கோரிக்கையை யாரும் செவி சாய்க்கவில்லை. மாபெரும் கூட்டணி அமைப்போம் என பழனிசாமி சொல்லிக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கெனவே கூட்டணியில் இருந்த பன்னீர்செல்வமும் தினகரனும் வெளியேறிவிட்டார்கள். இப்படியான விரக்தியில் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுக்கள் நாராச நடையில் மாறிக் கொண்டிருக்கிறது.
அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்று செங்கோட்டையன் ஒரு பக்கம் கட்டையைப் போடுகிறார். துரோகத்தின், வஞ்சகத்தின் ஒட்டுமொத்த உருவமாக உள்ள பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்க முடியாது என்று சொல்லி டிடிவி தினகரன் முட்டுக்கட்டைப் போடுகிறார். பாஜக தலைமை தொடர்ந்து குட்டக் குட்ட எடப்பாடி பழனிசாமி குனிந்து போகிறார். இப்படிப் பதுங்கிப் பம்மிக் கிடக்கும் பழனிசாமி திமுக கூட்டணிக் கட்சிகள் என்றால் வீராவேசம் காட்டுவார்.
அடுத்து யார் அதிமுகவில் குழப்பத்தை ஏற்படுத்தப் போகிறார் என்று தன்னுடைய சகாக்களையே நம்ப முடியாத பரிதாப நிலையில் இருப்பவர் எடப்பாடி பழனிசாமி. விரக்தியில் விளம்பில் உள்ள அவர் திமுக கூட்டணியில் ஒற்றுமையில்லை, குழப்பம் நிலவுகின்றது என்று கூறுவது எல்லாம் நல்ல வேடிக்கை.
தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டு மக்களுக்குத் துரோகம் செய்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, காங்கிரஸ் கட்சியின் தலைவருடைய விசுவாசம் பற்றிப் பேச ஒரு தகுதியும் இல்லை” என்று ஆ.ராசா தனது அறிக்கையில் கடுமையாக தாக்கியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT