Published : 25 Sep 2025 05:54 AM
Last Updated : 25 Sep 2025 05:54 AM
கூடலூர்: அதிமுக ஆட்சியில்தான் கல்விக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். நீலகிரி மாவட்டம் கூடலூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களிடையே அவர் பேசியதாவது: கல்வியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடம் பிடித்ததற்கு அதிமுகதான் காரணம். அதிமுக ஆட்சியில் ஏராளமான கல்லூரிகள் திறக்கப்பட்டன. உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கையை 54 சதவீதமாக உயர்த்தியது அதிமுக அரசுதான்.
கல்விக்கு அதிக நிதி ஒதுக்கியது அதிமுக ஆட்சியில்தான். திமுகவின் 4 ஆண்டு ஆட்சியில் ஒரு அரசு மருத்துவக் கல்லூரியாவது கொண்டு வரப்பட்டதா ? அதிமுக ஆட்சியில் ஒரே ஆண்டில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தோம்.
நாட்டிலேயே ரோல் மாடல் ஆட்சி செய்வது ஸ்டாலின் என்கிறார் உதயநிதி. அதிக கடன் வாங்குவதில், கமிஷன், ஊழலில், வாரிசு அரசியலில், ஸ்டிக்கர் ஒட்டுவதில்தான் திமுக அரசு ரோல்மாடலாக உள்ளது. போட்டோ சூட் நடத்துவதில் ரோல் மாடல் ஸ்டாலின்தான். திமுகவில் அனைத்து பதவிகளையும் கருணாநிதி குடும்பத்தினரே அனுபவிக்கின்றனர். எந்த கட்சியிலாவது இப்படி குடும்ப ஆட்சி நடப்பதை பார்க்க முடியுமா? கட்சியிலும் சரி, ஆட்சியிலும் சரி கருணாநிதி குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகாரத்துக்கு வரமுடியும். இப்படிப்பட்ட கட்சி மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?
முதலிடத்தில் அதிமுக உள்ளது: செல்வப்பெருந்தகை பல கட்சிகளில் இருந்தவர். காங்கிரஸ் கட்சியில் உள்ள மற்ற தலைவர்கள் ஆட்சியில் பங்கு கேட்கின்றனர். ஆனால், ராகுல் ஆட்சியில் பங்குகேட்க சொல்லவில்லை என்கிறார் செல்வப்பெருந்தகை. அவர் திமுகவை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறார். செல்வப்பெருந்தகை காங்கிரஸுக்கு விசுவாசமாக இல்லை.
திமுகவுக்குத்தான் விசுவாசமாக உள்ளார். அதிமுக அடிக்கடி கூட்டணி மாறுவதாக சொல்கிறார்கள். அதிமுகவை பொறுத்தவரை எப்போதும் கூட்டணியை நம்பி இருந்ததில்லை. ஆனால், திமுகதான் கூட்டணியை நம்பி உள்ளது. எங்களோடு மக்கள் கூட்டணி வைத்துள்ளார்கள். 2026 தேர்தலில் அதிமுகதான் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்துக்குத்தான் மற்ற கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன.
அதிமுக பாஜகவின் அடிமை என்கிறார் ஸ்டாலின். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டணி அமைக்கிறோம். ஸ்டாலின்போல பல கட்சிகளை கூட்டணியில் வைத்துக்கொண்டு, அவர்களை அடிமையாக்க நாங்கள் விரும்பவில்லை. எங்கள் கூட்டணியில் உள்ளவர்கள் சுதந்திரமாக உள்ளனர். கண்ணுக்கு தெரியாத காற்றில்கூட ஊழல் செய்யும் கட்சி திமுகதான். இவ்வாறு அவர் பேசினார். முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, செ.ம.வேலுச்சாமி மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT