Published : 24 Sep 2025 05:05 PM
Last Updated : 24 Sep 2025 05:05 PM
சென்னை: “தவெகவினர் சின்ன பிள்ளைகள். ஒரு கருத்தை கருத்தாக அவர்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. விஜய்க்கு அடிப்படை அரசியலே தெரியவில்லை” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “என்னை தவெகவினர் தொடர்ச்சியாக விமர்சிப்பதை பார்த்து ரசித்துவிட்டு செல்ல வேண்டியதுதான். தவெகவினர் சின்ன பிள்ளைகள். ஒரு கருத்தை கருத்தாக அவர்களால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. அவர்கள் பக்குவப்பட வேண்டும். பாஜக கொள்கை எதிரி, திமுக அரசியல் எதிரி என தவெக தலைவர் விஜய் சொல்கிறார்.
கொள்கைக்கும், அரசியலுக்கும் என்ன வேறுபாடு? எனில், திமுகவின் கொள்கையில் தவெகவுக்கு உடன்பாடு இருக்கிறதா, பாஜகவின் அரசியல் செயல்பாடுகளில் விஜய்க்கு உடன்பாடு இருக்கிறதா? பாஜக கொள்கை எதிரி என்றால், தவெகவுக்கு காங்கிரஸ் கட்சி கொள்கை நண்பனா? பாஜகவின் கொள்கைக்கும், காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கும் உள்ள வேறுபாட்டை சொல்ல முடியுமா?
பாஜகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் ஒரே கொள்கைதான். கொடியில் வண்ணம் மாறும். ஆனால், கொள்கையில் எண்ணம் மாறாது. அதேதான் திமுகவுக்கும், அதிமுகவுக்கும். மதச்சார்பற்ற சமூக நீதி என்கிறார்கள். எனில், அவரது ஆட்சியில் இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு இருக்குமா? மாநாட்டில் சாதி, மதம், மொழி, இனம் என பிரிக்கிறார்கள் என்று சொல்கிறார். மொழி, இனம் என்று சொல்லும்போதே விஜய்க்கு அடிப்படை அரசியலே தெரியவில்லை என்பது தீர்மானமாகிறது. உலகம் முழுவதும் மொழியின் அடிப்படையில்தான் அனைத்து கட்சிகளும் அரசியலை செய்கின்றன.
நாகப்பட்டினத்தில் மீனவர்கள், இலங்கைத் தமிழர்கள் பற்றி திடீரென பேசுகிறார். அவர் பேசுவது, பிரதமர் மோடி தமிழ் பேசுவதை போல் உள்ளது. ஆத்மார்த்தமாக இதயத்தில் வலி இருந்தால் இவர்களை பற்றிய பேச்சு விஜய்யின் முதல் மாநாட்டிலே வந்திருக்கும். இதையெல்லாம் கேட்டால் விஜய்யை நான் விமர்சிப்பதாக சொல்கின்றனர். பொதுத் தளத்துக்கு வந்த பிறகு, மாற்றுக் கருத்துகள் என்பது எழத்தான் செய்யும்” என்று சீமான் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT