Published : 24 Sep 2025 03:47 PM
Last Updated : 24 Sep 2025 03:47 PM
புதுச்சேரி: “விஜய் கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக அரசியலில் நிலைத்துவிட முடியாது. கூட்டத்தை கூட்டியும் இன்று அரசியலில் தடம் தெரியாமல் போனதற்கு பலபேர் எடுத்துக்காட்டாக உள்ளனர்” என்று திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.
புதுவை கதிர்காமம் தொகுதி திமுக சார்பில் கலைஞர் சிலை, நுாலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா என முப்பெரும் விழா இன்று நடந்தது. விழாவில், தலைமைக் கழக அமைப்புச் செயலாளர் வழக்கறிஞர் ஆர்.எஸ். பாரதி, புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
அதைத்தொடர்ந்து திமுக அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களிடம் கூறியதாவது: “புதுச்சேரியில் ஏற்கனவே பாரூக் மரைக்காயர், எம்.டி.ராமச்சந்திரன், ஆர்.வீ.ஜானகிராமன் என 3 முதல்வர்கள் திமுக சார்பில் இருந்துள்ளார்கள். 4 முறை ஆட்சியமைத்துள்ள நிலையில், தற்போது 5வது முறையாக திமுக ஆட்சியமைக்க உறுப்பினர் சேர்க்கை நடைபெறவுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் திமுக வெல்லும் வகையில் பணியாற்றுகிறோம். தொகுதி பங்கீடு குறித்து உள்ளூர் தலைவர்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். ஆனால் அதுகுறித்து இறுதி முடிவை ராகுல் காந்தியும், ஸ்டாலினும் தான் எடுப்பார்கள்.
தமிழகத்தில் திமுகவுக்கு நாங்கள் தான் போட்டி என அதிமுக - தவெக போன்ற கட்சிகள் சொல்கிறார்கள், எங்களுக்கு யார் போட்டி என்பது தேர்தல் நேரத்தில் தான் தெரியும், தற்போதைய சூழலில் நாங்கள் வலுவாக உள்ளோம். கடந்த 2019ல் இருந்தே எடப்பாடி பழனிசாமி எங்கள் கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும் என சொல்லிக்கொண்டு இருக்கிறார், ஆனால் தற்போது அவர் கட்சியில் இருந்தே பாதி பேர் வெளியேறிவிட்டனர். முதலில் எடப்பாடி அவர் நிலைமையை காப்பாற்றிக்கொள்ள வேண்டும்” என்றார்.
விஜய் செல்லும் இடமெல்லாம் அதிக கூட்டம் கூடுவதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு, “பெரிய பெரிய ஜாம்பவான்களை எல்லாம் சந்தித்த கட்சி திமுக, தயவு செய்து விஜய் பற்றி கேட்காதீர்கள். கூட்டத்தை கூட்டிவிட்டார் என்பதற்காக ஒருவர் அரசியலில் நிலைத்துவிட முடியாது. கூட்டத்தை கூட்டியும் இன்று அரசியலில் தடம் தெரியாமல் போனதற்கு பலபேர் எடுத்துக்காட்டாக உள்ளனர்.” என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT