Published : 24 Sep 2025 12:27 PM
Last Updated : 24 Sep 2025 12:27 PM
கட்சியை விட்டுப் போனவர்களுக்கு மீண்டும் கழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆணித்தரமாக சொல்லி வரும் நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான நத்தம் விசுவநாதனையும் பழனிசாமி ஓரங்கட்ட நினைப்பதாக விசுவநாதனின் விசுவாச வட்டம் விசும்புகிறது.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக-வில் நத்தம் விசுவநாதனும், திண்டுக்கல் சீனிவாசனும் இருதுருவ அரசியல் நடத்துபவர்கள். இதைப் புரிந்துகொண்டு சீனிவாசனுக்கு பொருளாளர் பதவியையும், விசுவநாதனுக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவியையும் கொடுத்து இருவரையும் சரிசமமாக பாவித்து வந்தார் பழனிசாமி.
இந்த நிலையில், அண்மையில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க டெல்லி சென்ற பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட சீனியர்களை உடன் அழைத்துச் சென்றார். ஆனால், நத்தம் விசுவநாதன் இந்த லிஸ்ட்டிலிருந்து கடைசி நேரத்தில் கழட்டி விடப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் ஆதங்கத்துடன் பேசிய நத்தம் விசுவநாதனின் ஆதரவாளர்கள், “அமித் ஷாவை சந்திக்க யாரெல்லாம் செல்வது என முதலில் ரெடியான லிஸ்ட்டில் சீனிவாசன், நத்தம் விசுவநாதன் இருவரது பெயருமே இருந்துள்ளது.
இதுகுறித்த தகவல் தெரிவிக்கப் பட்டதால் விசுவநாதனும் டெல்லி செல்வதற்காக லக்கேஜ்களை எடுத்து வைத்துக்கொண்டு தயாராய் இருந்துள்ளார். ஆனால் கடைசி நேரத்தில், அவரை தவிர்த்துவிட்டு திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோரை மட்டும் அழைத்துக்கொண்டு டெல்லிக்கு விமானம் ஏறியுள்ளார் பழனிசாமி. இதனால் அப்செட்டான விசுவநாதன் தனது ஆதரவாளர்களிடம் இதுகுறித்து வருத்தப்பட்டு பேசி இருக்கிறார்” என்றனர்.
திண்டுக்கல் மாவட்ட அதிமுக-வினரோ, “கடந்த சில மாதங்களாகவே கட்சிக்குள் சீனிவாசனுக்கு கொடுக்கும் முக்கியத்தும் விசுவநாதனுக்கு கொடுக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. இத்தனைக்கும் இருவருமே மாநிலப் பொறுப்பில் இருப்பவர்கள்.
இபிஎஸ் திண்டுக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 6,7 தேதிகளில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டார். அப்போதும் சீனிவாசனுக்குத்தான் அதிமுக்கியத்துவம் தரப்பட்டது. பழநி பிரச்சாரத்தில் நத்தம் விசுவநாதன் பேசிக்கொண்டிருக்கும் போதே அவரை சீக்கிரமாக முடிக்கச் சொல்லி இபிஎஸ் சைகை காட்டியதும் அவரது ஆதரவாளர்களை வருத்தப்பட வைத்தது.
அதேசமயம் திண்டுக்கல் பிரச்சாரத்தில் திண்டுக்கல் சீனிவாசனை புகழ்ந்த அளவுக்கு நத்தம் விசுவநாதனை இபிஎஸ் மெச்சவில்லை. இப்படியான சூழலில் தான், தன்னை விட்டுவிட்டு சீனிவாசனை டெல்லிக்கு அழைத்துச் சென்றது விசுவநாதனை மேலும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது. இதனால் அவர் வேறெங்கும் செல்லாமல் நத்தம் அருகே வேம்பார்பட்டியில் உள்ள தனது வீட்டிலேயே முடங்கி இருந்துவிட்டார்.
இந்தத் தகவலைக் கேள்விப்பட்ட இபிஎஸ், முன்னாள் அமைச்சர்களான தங்கமணி, சி.வி.சண்முகம் ஆகியோரை நேரில் அனுப்பி விசுவநாதனுக்கு யதார்த்தத்தை எடுத்துச் சொல்லி அவரை சமாதானப்படுத்தி இருக்கிறார். ஆனால், காரணம் என்னவாக இருந்தாலும் இதுமாதிரியான மனக்கசப்புகள் இனியும் தொடராமல் பார்த்துக் கொண்டால் நல்லது” என்றனர். இப்படியே ஆளாளுக்கு ஒரு ரூட்டில் குடைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தால், பாவம் பழனிசாமியும் தான் என்ன செய்வார்?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT