Published : 24 Sep 2025 05:58 AM
Last Updated : 24 Sep 2025 05:58 AM
சென்னை: பாஜக கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வலியுறுத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் மனைவி கீதா ராதா காலமானதையொட்டி, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார், ராதிகா சரத்குமார் ஆகியோரிடம் அண்ணாமலை ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தின் அரசியல் களம் குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனிடம் பேசினேன். திமுக கூட்டணியை வீழ்த்த தேசிய ஜனநாய கூட்டணியால் மட்டுமே முடியும். எனவே என்டிஏ கூட்டணியில் மீண்டும் இணைய வேண்டும் என அவரிடம் வலியுறுத்தியுள்ளேன். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலரையும் சந்திக்க உள்ளேன். அவரின் சுற்றுப்பயணம் முடிந்தவுடன் சந்திப்பேன்.
கேரளாவில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.1,100 கோடி நன்கொடை வந்திருக்கும் நிலையில், 50 ஆண்டுகளுக்கு ரூ.1,000 கோடி ஒதுக்கியிருப்பதாக கேரள அரசு கூறுகிறது. இது கொள்ளையடிப்பதற்கு சமம்தானே. தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அங்கு சென்று 5 ஏக்கர் நிலம் கேட்கிறார். இங்கு ஆக்கிரமிக்கப்பட்ட 1.25 லட்சம் ஏக்கரை முதலில் மீட்கட்டும்.
முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து தவெக தலைவர் விஜய் பேசிய கருத்தை வரவேற்கிறேன். அவர் குற்றச்சாட்டை மறுக்கும்பட்சத்தில் முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தமிழகத்தில் கப்பல் கட்டுமான தளங்கள் அமைக்க மத்திய அரசு முதலீடு செய்வதை கூட ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்.
நடிகர் ரஜினிகாந்தை அடிக்கடி சந்திப்பது வழக்கம். இதை அரசியலோடு முடிச்சுப்போட அவசியமில்லை. தனிக்கட்சித் தொடங்கினால் சொல்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இலங்கை பயணம்: இதனிடையே சென்னையில் இருந்து நேற்று விமானம் மூலம் இலங்கைக்கு அண்ணாமலை புறப்பட்டுச் சென்றார். அவரது குடும்பத்தினர் முன்பே இலங்கைக்குச் சென்ற நிலையில், ஒரு வார கால ஓய்வுக்குப் பிறகு அவர் சென்னை திரும்புவார் என பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT