Published : 23 Sep 2025 05:35 AM
Last Updated : 23 Sep 2025 05:35 AM
சென்னை: நாட்டில் அதிகரித்து வரும் கண் தொடர்பான நோய்களை உடனே கண்டறிய சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும் என்று டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி மருத்துவர் அஸ்வின் அகர்வால் தெரிவித்தார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை சார்பில் 18-வது கல்பவிருக் ஷா தேசிய கண் மருத்துவ கருத்தரங்கம் சென்னையில் நடந்தது.
ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன் நாகநாதன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். இந்தியா முழுவதும் இருந்து 300-க்கும் அதிகமான இளம் கண் மருத்துவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றனர். 2 நாட்கள் நடைபெற்ற கருத்தரங்கம் முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர்களுக்கான குறுகிய கால தீவிர கல்வித் திட்டமாக இருந்தது. கண் அழுத்த நோய், கருவிழி, நரம்பியல் சார்ந்த கண் மருத்துவம் உள்ளிட்ட தலைப்புகளில் 30-க்கும் மேற்பட்ட முன்னணி கண் மருத்துவ நிபுணர்கள் உரையாற்றினர்.
முன்னதாக, டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் முதன்மை மருத்துவ அதிகாரி மருத்துவர் அஸ்வின் அகர்வால் கூறுகையில், “கண் தொடர்பான நோய்களை நுட்பமான சிகிச்சை மூலம் உடனடியாக கண்டறிய சிறப்புப் பயிற்சி வழங்க வேண்டும். அகர்வால்ஸ் மருத்துவமனையில் கடந்தாண்டு மட்டும் 1,200 விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவிலேயே அதிகளவில் விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் செய்வதில் அகர்வால்ஸ் மருத்துவமனை ஒன்றாகும். கண் பார்வைப் பிரச்சினை உள்ளவர்களில் 5 முதல் 10 சதவீத பேருக்கு, விழி வெண்படல அறுவை சிகிச்சைக்குப் பதிலாக ‘பின்ஹோல் பியூபிலோ பிளாஸ்டி’ அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT