Last Updated : 23 Sep, 2025 10:22 AM

 

Published : 23 Sep 2025 10:22 AM
Last Updated : 23 Sep 2025 10:22 AM

போட்டியிட்டே ரெண்டு மாமாங்கமாச்சு... தேனியில் தேய்ந்து வரும் காங்கிரஸ்!

சன்னாசி, சங்கரநாராயணன்

2019 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 38 தொகுதிகளை கைப்பற்றிய திமுக கூட்டணி, தேனி தொகுதியில் மட்டும் அதிமுக-விடம் தோற்றுப் போனது. தேனியை தங்களுக்காக கேட்டு வாங்கிய காங்கிரஸ், அங்கு இறக்குமதி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைக் கொண்டுபோய் நிறுத்தியதால் ஓபிஎஸ் மகனிடம் தோற்றுப் போனது. வரலாறு இப்படி இருக்க... தேனி மாவட்டத்தில் ஒரு சட்டமன்றத் தொகுதியையாவது இம்முறை காங்கிரஸுக்கு ஒதுக்கவேண்டும் என கதர் பார்ட்டிகள் இப்போதே கலகக்குரல் எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஒரு காலத்​தில் தேனி (அப்​போது பெரியகுளம்) மக்​கள​வைத் தொகு​தியை மட்​டுமல்​லாது தேனி மாவட்​டத்​தில் உள்ள சட்​டமன்​றத் தொகு​தி​களி​லும் ஆதிக்​கம் செலுத்​தி​யது காங்​கிரஸ். காலப் போக்​கில் அந்த நிலைமை மாறி கடந்த 20 வருடங்​களுக்​கும் மேலாக இங்கு காங்​கிரஸ் போட்​டி​யி​டாத நிலை நீடித்து வரு​கிறது. இதனால் கட்​சி​யின் வளர்ச்​சி​யும் கண்​ணுக்​குத் தெரி​யாமல் போய்​விட்​டது. இத்​தனைக்​கும் இந்த மாவட்​டத்​தில் பாரம்​பரிய​மான காங்​கிரஸ் ஓட்டு வங்கி இன்​னும் பத்​திர​மாகவே இருக்​கிறது.

தேனி மாவட்​டத்​தில் மொத்​தம் உள்ள 4 தொகு​தி​களி​லுமே கடந்த முறை திமுக தான் போட்​டி​யிட்​டது. அதில் மூன்று தொகு​தி​களில் வென்ற திமுக, போடி​யில் மட்​டும் ஒபிஎஸ்​ஸிடம் தோற்​றுப் போனது. இந்த மாவட்​டத்​தில் கடைசி​யாக 1991-ல் தான் கம்​பம் தொகு​தியை காங்​கிரஸுக்கு விட்​டுக் கொடுத்​தது அதி​முக. அந்​தத் தேர்​தலில் கம்​பத்​தில் வெற்​றி​பெற்ற ஓ.ஆர்​.​ரா​மச்​சந்​திரன், அடுத்து வந்த இரண்டு தேர்​தல்​களில் தமாகா வேட்​பாள​ராக திமுக மற்​றும் அதி​முக கூட்​ட​ணி​களில் போட்​டி​யிட்டு கம்​பம் தொகு​தியை வென்​றார்.

இதே​போல் போடி தொகு​தி​யில் கடைசி​யாக 1984-ல் தான் போட்​டி​யிட்​டது காங்​கிரஸ். அப்​போது, மூப்​ப​னாரின் தீவிர விசு​வாசி​யான கே.எஸ்​.எம்​.​ரா​மச்​சந்​திரன் போடிக்கு எம்​எல்ஏ ஆனார். ஆண்​டிபட்டி தொகு​தி​யில் கடைசி​யாக 1980-ல் காங்​கிரஸ் போட்​டி​யிட்​டது. அந்​தத் தேர்​தலில் காங்​கிரஸ் வேட்​பாளர் கே.எம்​.கந்​த​சாமி தோற்​றுப் போனார். இதே​போல் பெரியகுளம் தொகு​தி​யில் கடைசி​யாக 1989-ல் போட்​டி​யிட்ட காங்​கிரஸ் கரைசேர முடி​யாமல் தோற்​றுப் போனது.

2001-ம் ஆண்​டுக்​குப் பிறகு கூட்​ட​ணிக் கட்​சிகள் சட்​டமன்​றத் தேர்​தலில் தேனி மாவட்​டத்​தில் காங்​கிரஸுக்கு சீட் ஒதுக்​கு​வதை கிட்​டத்​தட்ட மறந்தே போய்​விட்​டன. கேட்​டுப் பெறு​வதற்கு போராட்ட குணம் உள்ள காங்​கிரஸ்​காரர்​கள் இல்​லாமல் போன​தால் இன்​ன​மும் இந்த நிலை நீடிக்​கிறது.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய மாவட்ட காங்​கிரஸார், “தேனி மாவட்​டம் முழு​வது​மாக காங்​கிரஸுக்​கான ஓட்டு வங்கி கணிச​மாக இருந்​தும் அதனால் எங்​களுக்கு எந்​தப் பிரயோஜன​மும் இல்​லாமல் இருக்​கிறது. கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு உழைப்​பதும் ஓட்​டுப் போடு​வதுமே தேனி மாவட்ட காங்​கிரஸாருக்கு எழுதப்​பட்ட விதி​யாகி விட்​டது. எந்​தக் கட்​சி​யாக இருந்​தா​லும் எம்​பி, எம்​எல்ஏ, மந்​திரி என பிர​தி​நி​தி​கள் இருந்​தால் தான் கட்சி துடிப்​புடன் இருக்​கும்.

தேனி​யில் காங்​கிரஸுக்கு அப்​படி​யான பிர​தி​நி​தி​கள் வெற்​றி​பெற்று ரெண்டு மாமாங்​க​மாகி விட்​ட​தால் கட்​சி​யின் நிலைமை இங்கு கவலைக்​கிட​மாக இருக்​கிறது. காலத்​துக்​கும் கூட்​ட​ணிக் கட்​சிகளுக்கு நாங்​கள் உப்​புமூட்டை தூக்​கிக் கொண்டே இருக்க வேண்​டுமா என்​றுகூட எங்​கள் கட்​சித் தலை​மை​யிடம் கார​சா​ர​மாக கேள்வி கேட்​டும் எது​வும் நடக்​க​வில்​லை. ஆனால், இம்​முறை இந்த மாவட்​டத்​தில் ஒரு தொகு​தி​யை​யா​வது காங்​கிரஸுக்கு ஒதுக்​கச் சொல்லி கட்​டாய​மாகக் கேட்​போம்” என்​ற​னர்.

காங்​கிரஸ் கட்சி மாவட்​டத் துணைத் தலை​வர் சன்​னாசி இது தொடர்​பாக நம்​மிடம் பேசும்​போது, “இந்த மாவட்​டத்​தில் காங்​கிரஸுக்கு மக்​கள் பிர​தி​நி​தி​கள் இல்​லாமல் இருப்​பது கட்​சி​யின் வளர்ச்​சி​யை​யும் பாதிக்​கிறது. எனவே, இம்​முறை காங்​கிரஸுக்கு கட்​டா​யம் ஒரு தொகு​தியை ஒதுக்​கச் சொல்லி திமுக தலை​மை​யிடம் கேட்​போம். 4 தொகு​தி​களில் எதைக் கொடுத்​தா​லும் காங்​கிரஸ் வெற்​றி​பெறும். இருப்​பினும் தொகுதி எது என்​பது கடைசி நேரத்​தில் தான் தெரிய வரும்” என்​றார்.

காங்​கிரஸ் வர்த்தக பிரிவு மாவட்​டத் தலை​வ​ரான சங்​கர​நா​ராயணன் நம்​மிடம், “இம்​முறை நான் கம்​பம் அல்​லது போடி​யில் போட்​டி​யிட வாய்ப்​புக் கேட்க இருக்​கிறேன். தேர்​தல் களத்​தில் நேரடி​யாக இறங்​கி​னால் தான் காங்​கிரஸ் கட்சி வளர்ச்சி அடை​யும்” என்​றார். தொகு​தியை கேட்டு வாங்​கி​விட்டு இளங்​கோவனைப் போல வெளியூர் பார்ட்​டிகளை வேட்​பாள​ராக இறக்​குமதி செய்​து​வி​டா​மல் இருக்க வேண்​டுமே காங்​கிரஸ் தலைமை!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x