Published : 22 Sep 2025 05:50 AM
Last Updated : 22 Sep 2025 05:50 AM
சென்னை: ஆளுநர் ரவி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வரிசையில் தவெக தலைவர் விஜய் அவதூறு அரசியல் செய்வதாக விசிக துணை பொதுச்செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் குற்றம் சாட்டியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த தவெக தலைவர் விஜய், திமுக அரசு மீனவர்கள் நலனை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்
வைத்திருந்தார்.
இதற்கு பதிலளித்து தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும் விசிக துணை பொதுச்செயலாளருமான ஆளூர் ஷாநவாஸ் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக அரசியல் களத்தை மிகவும் கீழிறக்கி, அவதூறுகளாலும், பொய்களாலும், வன்மத்தாலும் மாற்றத் துடிக்கும் சக்திகளாக பாஜக, சங்பரிவார சக்திகள் விளங்குகின்றன. அவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் இட்டு கட்டப்பட்ட பொய்களை விஜய் கையில் எடுத்திருக்கிறார்.
நாகப்பட்டினத்துக்கு வருகை தந்த அவர், முழுக்க முழுக்க பொய் தகவல்களை சொல்லி சென்றிருக்கிறார். அங்குள்ள மக்களின் கோரிக்கைகள் நான்கரை ஆண்டுகளில் எந்தளவு நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பது தொடர்பாக எந்த ஆய்வும் இன்றி, வன்மத்தோடு, பொய்யை சொல்ல வேண்டும் என சொல்லியிருக்கிறார்.
சாமந்தான்பேட்டையில் நீண்ட கால கோரிக்கையான தூண்டில் வளைவுடன் கூடிய மீன்பிடித் துறைமுகம் இந்த ஆட்சியில்தான் ரூ.32 கோடியில் அமைக்கப்பட்டு வருகிறது. நாகூர்பட்டினச்சேரி, நம்பியார் நகரில் கடல் அரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது. நம்பியார் நகரில் புயல் பாதுகாப்பு மையம் கட்டப்பட்டிருக்கிறது. அக்கரப்பேட்டையில் ரூ.100 கோடி மீன் இறங்கு தளம் அமைக்கப்பட்டிருக்கிறது. வரலாற்றில் இல்லாத அளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்களை எல்லாம் செய்யவே இல்லை என சொல்வதன் மூலம் அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கிறார் விஜய். நாகூர் அரசு மருத்துவமனை ரூ.5 கோடியில் சீரமைப்பதோடு, பணியாளர்கள் பற்றாக்குறை இல்லாத நிலை இருக்கிறது. இவையெல்லாம் தெரியாமல் பேசுகிறார்.
உண்மையை சொல்லி அரசியல் செய்ய முடியாததால், அவதூறு அரசியலை கையில் எடுத்திருக்கிறார். அது நீடிக்காது. மக்களால் நிராகரிக்கப்படும் நிலை விஜய்க்கும் வரும். தனது ஆட்சி காலத்தில் செயல்படுத்திய திட்டத்தை திமுக அரசு செய்ததாக அதிமுக பொதுச்செயலாளர் திசை திருப்புகிறார். இது அந்த மக்களுக்குத் தெரியும். எனவே, பதிலளிக்க அவசியமில்லை. ஆனால், விஜய் முற்றிலும் பொய் சொல்கிறார். இதை மக்களிடம் எடுத்துச் சொல்ல தேவை இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT