Published : 21 Sep 2025 06:04 PM
Last Updated : 21 Sep 2025 06:04 PM
மதுரை: தேர்தலில் திமுகவுக்கும், தவெகவுக்குமே போட்டியென விஜய் அறியாமல் பேசுகிறார் என, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மகாளய அமாவாசையையொட்டி, மதுரை தெப்பக்குளத்திலுள்ள முத்தீஸ்வரர் கோயிலில் ஏற்பாடு செய்து இருந்த அன்னதான நிகழ்வில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் குடும்பத்தினருடன் பங்கேற்று பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தின் உண்மை நிலவரத்தை திமுக அரசு மறைக்கிறது. பங்காளி சண்டை, பகையாளியை தடுப்பதற்காகத்தான் திமுக உள்ளதா?, தமிழக மக்களின் முதுகெலும்பை உடைத்துவிட்டு தலை குனியவிடமாட்டேன் என்று என்ன சொல்வது.
மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்திற்கு ஒரு சல்லி காசையும் திமுக பெற்றுத் தரவில்லை. திமுகவுக்கு தேவை என்றால் பிரதமருக்கு வெண்குடை பிடிப்பதும், தேவையில்லை என்றால் கருப்பு பலூன் பறக்க விடுவதும் வழக்கமான ஒன்றாகிவிட்டது.
மத்திய அரசுடன் இணைந்து தமிழகத்துக்கு திமுக எந்த ஒரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை. ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மக்களிடம் ஆதரவை கேட்கலாம், தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தியாக வரலாறு உள்ளது. இந்த தியாக வரலாற்றுடன் அதிமுக தேர்தல் களத்தை சந்திக்கிறது. அதனால் தான் அதிமுகவிற்கு நிரந்தர வாக்கு வங்கி உள்ளது. விஜய் பரீட்சை எழுதாமல் பாஸாகி விடுவேன் எனச் சொல்கிறார்.
அவர் பரீட்சை எழுதட்டும். பாஸ் ஆவாரா, இல்லையா என, பொறுத்திருந்து பார்ப்போம். அரசியல் களத்தில் விஜய் தற்போது தான் படித்துக் கொண்டிருக்கிறார். திமுகவிற்கும், தவெகவிற்கும் போட்டியென விஜய் அறியாமல், தெரியாமல் பேசுகிறார். தமிழக அரசியல் களத்தில் திமுகவிற்கு மாற்று அதிமுக. அதிமுகவிற்கு மாற்று திமுக என்பது காலம் காலமாக உள்ள வரலாறு.
அதிமுக மட்டுமே திமுகவை வீழ்த்தும் சக்தியாக உள்ளது. எம்ஜிஆரை பேசாமல் யாரும் பொது வாழ்க்கையை தொடர முடியாது. அதிமுக பாஜக கூட்டணியில் டெல்லியில் எடுக்க வேண்டிய முடிவுகளை அமித்ஷா எடுப்பார். தமிழகத்தில் எடுக்க வேண்டிய முடிவை பொதுச்செயலாளர் பழனிசாமி எடுப்பார்.
அமித்ஷாவுடன் பேசியது பொதுச்செயலாளர் பழனிசாமிக்கும், ஆண்டவனுக்குமே தெரியும். முன்னணி சினிமா நட்சத்திரங்கள் கடை திறப்பு விழாவில் கூட்டம் கூடுகிறது, எல்லா நேரத்திலும் தலைமையாசிரியர் பதில் சொல்ல முடியாது. திமுகவை எதிர்ப்பதில் தலைமையாசிரியர் பழனிசாமி உறுதியாக உள்ளார். இவ்வாறு ஆர்பி உதயகுமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT