Published : 21 Sep 2025 12:08 AM
Last Updated : 21 Sep 2025 12:08 AM
நாகப்பட்டினம் / திருவாரூர்: பூச்சாண்டி வேலை காட்ட வேண்டாம். வரும் தேர்தலில் நீங்களா, நானா என்று பார்த்து விடலாம் என்று திமுகவுக்கு தவெக தலைவர் விஜய் சவால் விடுத்தார்.
நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே திரண்டிருந்த தொண்டர்கள் மத்தியில் தவெக தலைவர் விஜய் நேற்று பேசியதாவது: தமிழகத்தில் மீன் ஏற்றுமதியில் 2-வது இடத்தில் இருக்கும் நாகையில், நவீன வசதியுடன் மீன்களை பதப்படுத்தும் தொழிற்சாலைகள் இல்லை. மீனவ மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகள் இல்லை.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து குரல் கொடுப்பது நமது கடமை. நாகையில் 14 ஆண்டுகளுக்கு முன்பு மீனவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து பொதுக்கூட்டம் நடத்தினோம். நான் எப்போதும் மக்களுடன்தான் இருக்கிறேன். அதேநேரத்தில், ஈழத் தமிழர்களுக்காக துணை நிற்பதும் நமது கடமை. மீனவர் பிரச்சினையில் திமுகதான் கபட நாடகம் நடத்துகிறது.
வெளிநாட்டில் முதலீடா? - தமிழக முதல்வர் ஒவ்வொரு முறை வெளிநாடு பயணம் சென்றுவிட்டு வரும்போதெல்லாம், பல ஆயிரம் கோடி முதலீடு என்று சொல்கிறார். அவர் மனதை தொட்டு சொல்லட்டும், வெளிநாட்டு முதலீடா இல்லை வெளிநாட்டில் முதலீடா? ஒட்டுமொத்த தமிழகத்துக்கு முதலீடா? உங்கள் குடும்பத்தின் முதலீடா? மக்களுக்கு தொந்தரவு இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் வார இறுதிநாளில் சந்திக்க வருகிறேன். அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுப்பதற்காகவும்தான் ஓய்வு நாளில் வருகிறேன். ஆனால், மக்களை சந்திக்க எவ்வளவு கட்டுப்பாடுகள்? அரியலூரில் மின்சாரத்தை நிறுத்திவிட்டனர். திருச்சியில் ஸ்பீக்கர் வயர் கட்டாகிவிட்டது.
இதேபோல, ஆர்எஸ்எஸ் தலைவர், பிரதமர் மோடி அல்லது உள்துறை அமைச்சர் வந்தால் கட்டுப்பாடுகள் விதிப்பீர்களா? மின்சாரத்தை நிறுத்துவீர்களா? நிறுத்த மாட்டீர்கள். நீங்கள் அவர்களது மறைமுக உறவுக்காரர்கள்.
நேரடியாகவே கேட்கிறேன்... முதல்வரை நேரடியாகவே கேட்கிறேன். நீங்கள் மிரட்டிப் பார்க்கிறீர்களா? குடும்பத்தை வைத்து கொள்ளையடிக்கும் உங்களுக்கே இவ்வளவு இருந்தால், சொந்தமாக உழைத்து சம்பாதிக்கும் எனக்கு எவ்வளவு இருக்கும்? மக்களை சந்திக்க நான் கேட்கும் இடத்துக்கு அனுமதி தராமல், நெருக்கடியாக உள்ள இடத்தை தருகிறீர்கள். இந்த அடக்குமுறை, அராஜகம் தவறு. நான் மக்கள் சக்தியின் பிரதிநிதி, மாபெரும் கட்சியின் தலைவன்.
2026-ல் திமுகவுக்கும், தவெகவுக்கும்தான் போட்டி. இந்த பூச்சாண்டி வேலையெல்லாம் வேண்டாம். தில்லாக, கெத்தாக, நேர்மையாக தேர்தலை சந்திக்க வாருங்கள், நீங்களா அல்லது நானா என்று பார்த்துவிடலாம். இவ்வாறு அவர் பேசினார்.
மூட்டைக்கு ரூ.40 கமிஷன்: தொடர்ந்து, திருவாரூர் தெற்கு வீதியில் விஜய் பேசும்போது, “திருவாரூர் சொந்த மாவட்டம் என்கிறார்கள். ஆனால், திருவாரூர் கருவாடாக காய்கிறது. சாலை வசதி இல்லை. இங்குள்ள அமைச்சருக்கு முதல்வரின் குடும்பத்துக்கு சேவை செய்வதுதான் வேலையாக உள்ளது. நெல் கொள்முதல் மையங்களில் ஒரு மூட்டைக்கு ரூ.40 கமிஷன் வாங்குகிறார்கள். அந்த வகையில், பல கோடி ரூபாயை விவசாயிகளிடமிருந்து பிடுங்கி உள்ளனர்.
கல்வி, மருத்துவம், ரேஷன், வறுமை இல்லாத தமிழகம், குடும்ப ஆதிக்கம் இல்லாத தமிழகம், ஊழல் இல்லாத தமிழகம், உண்மையான மக்களாட்சிதான் தவெகவின் நோக்கம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT