Published : 20 Sep 2025 06:48 PM
Last Updated : 20 Sep 2025 06:48 PM
புதுக்கோட்டை: “கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ள அணைகளின் விவகாரங்களில் திமுக வாக்கு வங்கி அரசியல் செய்கிறது” என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் குற்றம்சாட்டினார்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் டெல்டா மண்டல விவசாயிகள் அணியின் சார்பில் தமிழக அரசைக் கண்டித்து இன்று (செப். 20) நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் பேசியது: “விவசாயிகளுக்கு திமுக தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை. அதோடு, விவசாயிகளுக்கு சுமையை மேலும் அதிகரித்து விவசாயிகள் விரோத அரசாக செயல்படுவது வேதனை அளிக்கிறது.
திமுக ஆட்சியை அகற்றுவதற்கு விவசாயிகளே முதல் படியாக இருப்பார்கள். கர்நாடகாவில் மேகேதாட்டு அணையின் மூலம் காங்கிரஸ் அரசும், கேரளாவில் முல்லைப் பெரியாறு அணையின் மூலம் கம்யூனிஸ்ட் அரசும் தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. ஆனால், இரு கட்சிகளும் திமுக கூட்டணியில் இருப்பதால் அணை விவகாரத்தைப் பற்றி பேசாமல், விவசாயிகளை வஞ்சிக்கும் விதமாக வாக்கு வங்கி அரசியலை திமுக செய்து வருகிறது. விவசாயிகளின் நலனைவிட கூட்டணிதான் முக்கியமாகவும் கருதுகிறது.
இந்தியா முழுவதும் உள்ள எந்த மாநிலத்துக்கும் விருப்பு, வெறுப்பு இலலாமல் திட்டங்களை பிரதமர் மோடி நிறைவேற்றி வருகிறார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், முதல்வராக பொறுப்பேற்கும் பழனிசாமி, தமிழகத்துக்கான திட்டங்களை மத்திய அரசிடம் பெற்றுத் தருவார். அதற்காக தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு விவசாயிகள் தயாராக வேண்டும்” என்றார்.
இதைத் தொடர்ந்து அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டெல்டா மண்டல விவசாயிகள் மாநாடு நடைபெற்றது. நிகழ்ச்சியில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ் மூப்பனார் மாவட்ட தலைவர்கள் எம்.ஆர். முத்துக்குமரசாமி, த.மோகன்ராஜ், ஆர்.எல். தமிழரசன், விவசாயிஅணி மாநிலத் தலைவர் துவார் ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் கூறியது: “தேர்தலில் எத்தனை அணிகள் களத்தில் நின்றாலும், தேசிய ஜனநாயக கூட்டணிதான் வெற்றி பெறும். இந்தக் கூட்டணியில் மேலும் சில புதிய கட்சிகள் இணைவதற்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT