Published : 20 Sep 2025 09:09 AM
Last Updated : 20 Sep 2025 09:09 AM
புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மாட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆளும் கட்சிக்கு எதிராக ஆசிட் கணைகளை வீச ஆரம்பித்திருப்பது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்குள் பகையை மூட்டிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2016-ல் புதுச்சேரி மாநிலத்தில் தேர்தலில் போட்டியிடாமலேயே முதல்வரானார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாராயணசாமி. அப்போது அவருக்காக தனது எம்எல்ஏ பதவியை தியாகம் செய்தவர் இப்போது பாஜக-வில் இருக்கும் அமைச்ச ஜான்குமார். ஆனால் அந்த ஆட்சியின் இறுதியில், மகன் ரிச்சர்டையும் சேர்த்துக்கொண்டு பாஜக-வில் ஐக்கியமானார் ஜான்குமார்.
இதையடுத்து, 2021 தேர்தலில் காமராஜ்நகர் தொகுதியில் ஜான்குமாரும், நெல்லித்தோப்பில் அவரது மகன் ரிச்சர்டும் பாஜக சார்பில் போட்டியிட்டு வென்றனர். அப்போதே அமைச்சர் பதவிக்கு அடிபோட்டார் ஜான்குமார். ஆனால், பெரும் போராட்டத்துக்குப் பிறகு அண்மையில் தான் அவரை அமைச்சராக்கியது பாஜக. ஆனாலும், இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் இன்னும் அவருக்கான இலாகாவை ஒதுக்காமல் வைத்திருக்கிறார் ரங்கசாமி.
இந்த நிலையில், ஜான்குமாருக்கு ரங்கசாமி இன்னும் இலாகா ஒதுக்காமல் இருப்பதற்கு ஜான்குமாரால் புதுச்சேரி அரசியலுக்கு கட்டி இழுத்துவரப்பட்ட லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸும் ஒரு காரணம் என்ற பேச்சு என்.ஆர்.காங்கிரஸ் வட்டாரத்தில் வட்டமடிக்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், “ஜோஸ் சார்லஸை புதுச்சேரி அரசியலுக்கு அறிமுகப்படுத்தியதே ஜான்குமாரும் அவரது குடும்பமும் தான். அவரை இம்முறை புதுச்சேரியில் நிறுத்தி எம்எல்ஏ ஆக்க வேண்டும்... வாய்ப்பு அமைந்தால் ஆட்சிக் கட்டிலிலேயே அமர்த்திப் பார்க்க வேண்டும் என்ற திட்டமெல்லாம் ஜான்குமார் தரப்புக்கு இருக்கிறது. அதற்காக 15 தொகுதிகள் வரைக்கும் தங்களது ஆதரவாளர்களை நிறுத்தி, லாட்டரி ’வளத்தால்’ ஜெயிக்கப் பார்க்கிறார்கள். இதற்காகவே ‘ஜேசிஎம் மக்கள் மன்றம்’ என்ற அமைப்பை ஜோஸ் சார்லஸ் நடத்தி வருகிறார்.
ஜான்குமாரின் மகன் ரீகன் தான் இதன் தலைவர். இந்த அமைப்பின் மூலம் மக்களுக்கு நல உதவிகளை வழங்கி வரும் ஜோஸ் சார்லஸ், 2026-ல் அமைச்சர் ஜான்குமாரின் காமராஜ்நகர் தொகுதியில் போட்டியிட தயாராகிறார். இவரை இங்கே நிறுத்திவிட்டு முதலியார்பேட்டை தொகுதிக்கு மாற முடிவெடுத்திருக்கும் ஜான்குமார், தனது மகனை ரிச்சர்டை மீண்டும் நெல்லித்தோப்பிலும் இன்னொரு மகனான ரீகனை பாகூரிலும் நிறுத்தும் திட்டத்திலும் இருக்கிறார்.
இந்த நிலையில், ஜூலை 5-ம் தேதி ஜான்குமாருக்கு பிறந்த நாள். இதையொட்டி, பொதுப்பணித்துறைக்கு சொந்தமான ஜான்குமாரின் எம்எல்ஏ அலுவலக வாசலிலேயே ஜோஸ் சார்லஸ் படத்துடன் கூடிய ஃபிளெக்ஸ்களை ஜான்குமார் ஆதரவாளர்கள் வைத்தார்கள். அப்போதே இதுகுறித்து, அரசு வளாகத்தில் எப்படி இந்த ஃபிளெக்ஸ்களை வைக்கலாம் என முணுமுணுப்புக் கிளம்பி அடங்கியது.
இதனிடையே புதுச்சேரில் குடிநீரில் கழிவுநீர் கலந்த விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கின. இதில் ஜோஸ் சார்லஸும், ரீகனும் அரசுக்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்தனர். ஜான்குமாரின் அரசியல் வார்ப்பான இவர்கள் இருவரும் தனது அரசை தாக்கிப் பேசியதால் முதல்வர் ரங்கசாமிக்கு ஜான்குமார் மீது கோபம். இதனால், அவருக்கு இலாகா ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தை கிடப்பில் போட்டுவிட்டார்” என்றனர்.
ஜோஸ் சார்லஸ் பாஜக-வின் பி டீம் போலவே தான் இருக்கிறார். அதனால் தான் தங்களின் அமைச்சரான ஜான்குமார், சார்லஸை முன்னிலைப்படுத்தி பிரச்சாரம் செய்வதை பாஜக தலைமை கண்டும் காணாமல் இருக்கிறது. ஆக, தங்களால் நேரடியாக செய்ய முடியாததை சார்லஸை வைத்து மறைமுகமாக செய்கிறது பாஜக என்ற ஆதங்கமும் ரங்கசாமிக்கு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஜோஸ் சார்லஸ், "குடிக்கும் தண்ணீரைக்கூட அரசால் சுகாதாரமாக தரமுடியவில்லை என்பதால் தான் விமர்சனம் செய்கிறோம். மக்களுக்குத் தேவையானதை அரசு முறையாகச் செய்தால் நான் ஏன் எதிர்த்துப் பேசப்போகிறேன்? இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவாக உள்ள அமைச்சர், எம்எல்ஏ-க்களை கட்சித் தலைமை நெருக்கினால் அவர்கள் அதற்கு பதில் சொல்லிக் கொள்வார்கள். இதில் நான் ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நாங்கள் எந்தக் கட்சிக்கும் பி டீமும் இல்லை” என்றார்.
அமைச்சர் ஜான்குமாரிடம் கேட்டதற்கு, "என்.ஆர்.காங்கிரஸ் அமைச்சர் திருமுருகனுக்கே138 நாள் கழித்துத்தான் இலாகா ஒதுக்கினார்கள். எனக்கு இன்னும் இலாகா ஒதுக்காமல் வைத்திருப்பது வருத்தமாக இருந்தாலும் அதற்காக முதல்வர் ரங்கசாமியை சங்கடப்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை. தொழிலதிபர் ஜோஸ் சார்லஸ் எனக்கு அமைச்சர் பதவி பெற்றுத்தரத்தான் செயல்பட்டார். அவரது செலவில் மக்களுக்கான நல உதவிகளை வழங்கி வருகிறோம். ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து வருகிறோம். இதற்கெல்லாம் குறிப்பாக வேறெந்தக் காரணமும் இல்லை” என்றார்.
இதனிடையே, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனுக்கும் சபாநாயகர் செல்வத்துக்கும் முதல்வர் ரங்கசாமிக்கு நெருக்கமானவரான வழக்கறிஞர் ராம் முனுசாமி அளித்துள்ள புகார் மனுவில், ‘விதிகளை மீறி எம்எல்ஏ அலுவலகத்தில் ஃபிளெக்ஸ்களை வைத்ததற்காக அமைச்சர் ஜான்குமார் மீது நடவடிக்கை எடுத்து ஃபிளெக்ஸ்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அவர், "அன்னதானம் அளிப்பது, மக்களுக்கு உதவி செய்வதெல்லாம் மகிழ்ச்சி தான். ஆனால், அரசு வழங்கிய எம்எல்ஏ அலுவலகத்தில் யாரோ ஒரு டிரஸ்ட் நிர்வாகியை தனது முதலாளி என்று அழைத்துவந்து அவரது படம் போட்ட ஃபிளெக்ஸ்களை அமைச்சர் ஜான்குமார் வைத்துள்ளார். இது தவறான செயல். தவறை உணர்ந்து அந்த ஃபிளெக்ஸ்களை அமைச்சர் ஜான்குமார் உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் சட்டம் தன் கடமையைச் செய்யும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT