Published : 20 Sep 2025 06:02 AM
Last Updated : 20 Sep 2025 06:02 AM
மதுரை: கரூர் பேருந்து நிலையம் அருகே அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரிய வழக்கில், மாவட்ட எஸ்பி. வரும் 22-ம் தேதிக்குள் முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூர் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் திருவிக, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை 125 சட்டப்பேரவைத் தொகுதிகளில் நிறைவு செய்துள்ளார். அவரது 5-ம் கட்ட பிரச்சாரப் பயணம் வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடைபெறுகிறது.
கரூர் பேருந்து நிலையம் அருகே, கரூர்- கோவை சாலையில் வரும் 25-ம் தேதி இரவு பழனிசாமி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அனுமதி கோரி போலீஸாரிடம் மனு அளிக்கப்பட்டது. போலீஸார் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்கப்பட்டது. பொதுக்கூட்டம் நடத்த தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை கரூர் நகர காவல் ஆய்வாளர் ஆய்வு செய்தார். ஆனால், இதுவரை அனுமதி வழங்கவில்லை.
கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்த அனுமதி கோரி மனு அளிக்கும்போது, அந்த மனுவை போலீஸார் உரிய காலத்தில் பரிசீலிப்பதில்லை. இதனால் அனுமதி கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டி உள்ளது. அந்த வழக்கு விசாரணைக்கு வரும்போது உரிய காரணம் இல்லாமல் மனுவை நிராகரித்து உத்தரவிடுகின்றனர்.
அதேபோல, தற்போது பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி அளித்துள்ள மனுவையும் நிராகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கரூர்- கோவை சாலையில் அஜந்தா திரையரங்கு அருகே செப்.25-ம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
பல கட்சிகளுக்கு அனுமதி... இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்புநிதி வாதிடும்போது, “மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில், மனுதாரர் கோரும் இடத்தில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்க இயலாது.
இதனால் மாற்று இடத்தைப் பரிந்துரைக்குமாறு மனுதாரருக்கு ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது” என்றார். மனுதாரர் தரப்பில், “பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரும் இடத்தில் 2022 முதல் பல அரசியல் கட்சிகள் பொதுக்கூட்டம் நடத்தியுள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, “மனுதாரர் தரப்பில் பொதுக்கூட்டதுக்கு அனுமதி கோரும் இடத்தில், ஏற்கெனவே பல்வேறு கட்சிகளுக்கு பொதுக் கூட்டம் நடத்த அனுமதி வழங்கியது தொடர்பான ஆவணங்களுடன், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்க வேண்டும். அந்த மனு அடிப்படையில் வரும் 22-ம் தேதி மாலைக்குள் காவல் கண்காணிப்பாளர் உரிய முடிவெடுக்க வேண்டும். மனு முடிக்கப்படுகிறது" என உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT