Published : 19 Sep 2025 08:35 PM
Last Updated : 19 Sep 2025 08:35 PM
கோவை: தேர்தல் ஆணையத்துக்கு எந்தவித புகாரையும் அளிக்காமல் போலியாக சில செய்திகளை மக்களிடம் சேர்க்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டு வருகிறார் என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.
கோவை சுங்கம் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பேருந்து நிழற்குடை அமைக்க பூமி பூஜை இன்று நடந்தது. கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவை தெற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுங்கம் பகுதியில் பயணிகளின் வசதிக்காக நிழற்குடை அமைக்க ரூ.19.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பேருந்துகள் இயக்கப்படும் நேரம் குறித்த விவரங்களை கொண்ட எலக்ட்ரானிக் பதாகை, இணையதள (வை ஃபை) சேவை வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. மத்திய அரசு சமீபத்தில் மேற்கொண்ட ஜிஎஸ்டி வரி சீர்திருத்த நடவடிக்கை வளர்ச்சியடைந்த பாரதத்தை நோக்கிய ஒரு முக்கிய நகர்வாகும். மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் வரி குறைக்கப்பட்ட நடவடிக்கை வியாபாரத்தை அதிகரிக்கும். மக்கள் சேமிக்க வாய்ப்பு ஏற்படும். இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்ட பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு நன்றி. மக்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பல்வேறு வர்த்தக தொழில் அமைப்பினர் இந்நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
வாக்குத் திருட்டு என தேர்தல் ஆணையத்துக்கு எந்தவித புகாரையும் அளிக்காமல் போலியாக சில செய்திகளை மக்களிடம் சேர்க்க ராகுல் காந்தி முயற்சி மேற்கொண்டு வருகிறார். தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்த பின்பும் இதுபோன்று அவர் பேசி வருவது அவரின் விரக்தியை எடுத்துக் காட்டுகிறது. பாஜக வெற்றி பெறும்போது இதுபோன்ற பிரச்சினைகளை கிளப்புவதை அவர் வாடிக்கையாக கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பாஜக தேர்தலுக்கு தயாராகி வருகிறது. கிரைண்டர்களுக்கு வரி குறைப்பு தொடர்பாக மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் திராவிட மாடல், சமூக நீதி மாடல் என்று திமுக ஆட்சி நடத்தி வரும் நிலையில், ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்கின்றன. சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது.
அரசியல் கட்சி நிகழ்வுகளில் பொது சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியல் கட்சித் தலைவர்களும், கட்சிகளும் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT