Published : 18 Sep 2025 07:59 AM
Last Updated : 18 Sep 2025 07:59 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மிதவை கப்பலுக்கு அடியில் உள்ள டேங்க்கை சுத்தம் செய்த போது 3 தொழிலாளர்கள் மூச்சு திணறி உயிரிழந்தனர். தூத்துக்குடி கடற்கரை சாலையில் பழைய துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து மாலத்தீவு உள்ளிட்ட இடங்களுக்கு மிதவை கப்பல் மற்றும் தோணிகள் மூலம் கட்டுமான பொருட்கள், காய்கறிகள் என பல்வேறு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
இந்நிலையில், கட்டுமான பொருட்களை ஏற்றி செல்லக் கூடிய மிதவை கப்பல் பழைய துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. மிதவை கப்பலின் அடியில் உள்ள டேங்க் பொதுவாக பேலஸ்ட் டேங்க் (Ballast Tank) என்று அழைக்கப்படுகிறது. இதுதான், கப்பலின் நிலைத் தன்மையை அதிகரித்து, கடலில் கப்பல் மிதக்க முக்கிய பாக மாகும்.
இந்த டேங்க்குகளில் தண்ணீரை நிரப்பி அல்லது வெளி யேற்றி, கப்பலின் எடையை மாற்றி, மிதக்கும் தன்மையையும், நிலைத்தன்மையையும் கட்டுப்படுத்த முடியும். அலைகள் அல்லது காற்றால் கப்பல் நிலைத்தன்மையை இழக்கும்போது, பேலஸ்ட் டேங்க்குகளில் தண்ணீரை நிரப்பி கப்பலை நிலைப்படுத்தலாம். கப்பலின் எடையை அதிகரிப்பதன் மூலம் அதன் மிதக்கும் தன்மையை கட்டுப்படுத்தவும், தேவையான ஆழத்தில் மிதக்கவும் இது உதவுகிறது.
இந்நிலையில், தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் நின்ற மிதவை கப்பலில் உள்ள பேலஸ்ட் டேங்க்கை சுத்தம் செய்வதற்காக டேங்க்கின் மூடியை நேற்று மாலை திறந் துள்ளனர். குறுகலான அந்த பகுதி வழியாக திருநெல்வேலி மாவட்டம் உவரியைச் சேர்ந்த ஜார்ஜ் மகன் ஜார்ஜ் ஷரோன் (25) என்பவர் டேங்க்குக்குள் இறங்கியுள்ளார். சிறிது நேரம் கழித்து ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சந்தீப்குமார் (22) என்பவர் இறங்கியுள்ளார்.
இருவரும் வெளியில் வராததால், புன்னக்காயல் வடக்கு தெருவைச் சேர்ந்த தாமஸ் மகன் ஜெனிஸ்டன் (35) என்பவர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். 3 பேரும் வெளியில் வராததால் அதிர்ச்சியடைந்த சக தொழிலாளர்கள் போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், உதவி அலுவலர் நட்டார் ஆனந்தி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்தனர்.
டேங்க்கின் மூடி குறுகலாக இருந்ததால், வெல்டிங் இயந்திரம் மூலம் சில அடிகள் வெட்டி அகற்றப்பட்டன. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் தார்ப்பாய் கொண்டு மூடியபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பிறகு தீயணைப்பு படை வீரர் இன்னாசி உரிய மூச்சு சுவாச கருவி உதவியுடன் டேங்குக்குள் இறங்கி பார்த்தபோது அங்கு 3 பேரும் இறந்த நிலையில் கிடந்தனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பிறகு தொழிலாளர்கள் 3 பேரின் உடலையும் மீட்டனர். பின்னர், பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆக்ஸிஜன் பற்றாக்குறையா?
தூத்துக்குடி ஏஎஸ்பி மதன், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் பாஸ்கரன், தருவைகுளம் கடலோர பாதுகாப்புக் குழும ஆய்வாளர் பேச்சிமுத்து ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நீண்ட நாட்களாக இந்த டேங்க் மூடப்பட்டு இருந்ததால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் தொழிலாளர்கள் மூவரும் மூச்சுத்திணறி இறந்திருக்க லாம் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். மேலும், விஷவாயு தாக்கி உயிரிழந்தார்களா என்றும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT