Published : 18 Sep 2025 09:38 AM
Last Updated : 18 Sep 2025 09:38 AM
அப்பாவும் பிள்ளையும் ஆளுக்கொரு பக்கமாக ரெண்டுபட்டு நிற்கும் பாமக-வில் அன்புமணி கோஷ்டி ஆளும் கட்சியை அநியாயத்துக்கு போட்டுத் தாக்கி வருகிறது. இதனால், இயல்பாகவே அய்யா கோஷ்டி ஆளும்கட்சியை அனுசரித்து நிற்கிறது. இந்த நிலையில், சேலத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு கோஷ்டிகளையும் சேர்ந்த பாமக எம்எல்ஏ-க்கள் திமுக ஆட்சிக்கு திடீர் புகழாரம் சூட்டி திகைக்க வைத்தார்கள்.
சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ-வான அருள் மருத்துவர் ராமதாஸ் அணியில் இருக்கிறார். இவர் தான் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக அன்புமணிக்கு எதிரான கருத்துகளை பதிவு செய்து வருகிறார். அதேசமயம் மேட்டூர் தொகுதி பாமக எம்எல்ஏ-வான சதாசிவம், அன்புமணி விசுவாசியாக தன்னை அடையாளம் காட்டிக் கொண்டு நிற்கிறார்.
கட்சி ரெண்டுபடுவதற்கு முன்னதாக சேலம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு விழாக்களில் அருளும் சாதாசிவமும் ஒன்றாகவே வந்து கலந்துகொள்வார்கள். ஆனால், பாமக ரெண்டுபட்டு பலகீனப்பட்டுப் போன பிறகு இருவரும் சம்பிரதாயத்துக்காகக் கூட சந்தித்துக் கொள்ள தயங்குகிறார்கள். அரசு விழாக்களில் கலந்து கொண்டாலும் ஆளுக்கொரு திசையில் வந்து உட்கார்ந்து இருந்துவிட்டுப் போவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு ரூ.3,500 கோடி வங்கிக் கடன் இணைப்புகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக 16-ம் தேதி சேலம் வந்திருந்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். இந்த நிகழ்ச்சிக்கான மேடையிலும் அருளும் சதாசிவமும் வழக்கம் போல ஆளுக்கொரு பக்கத்தில் தான் உட்கார்ந்திருந்தனர். ஆனால், இருவரும் திசைக்கொருவராய் இருந்தாலும் திமுக அரசை ஒருமித்த குரலில் பாராட்டிப் பேசி உதயநிதியையே உச்சிகுளிர வைத்துவிட்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பாமக எம்எல்ஏ-க்கள் இருவருமே, சேலம் மாவட்டத்துக்கு தமிழக அரசு பல திட்டங்களை செய்து கொடுத்திருப்பதாக பாராட்டியதுடன், தங்களது தொகுதியில் மேலும் தேவைகள் இருப்பதால் அதற்கான திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்று பேசினர். அதிலும் அன்புமணி கோஷ்டி எம்எல்ஏ-வான சதாசிவம் பேசுகையில், “மாற்றுக் கட்சியினர் என்றும் பாராமல் எங்களை துணை முதல்வர் விழாவுக்கு அழைத்திருப்பது சிறப்பானது” என்று குளிரவைத்தார்.
இதை மேற்கோள்காட்டி பேசிய உதயநிதி, “இந்த விழாவில் கலந்து கொண்டிருக்கும் இரண்டு எம்எல்ஏ-க்களுமே நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களும் கிடையாது; நமது கூட்டணியைச் சேர்ந்தவர்களும் கிடையாது” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட அருள், “இப்ப கூட்டணியில் இல்லை” என்று எடுத்துக் கொடுத்து சிரித்தார். அதை அர்த்தமாய் சிரித்தபடி ஆமோதித்த உதயநிதி, “ஆமாம்... இப்போது கூட்டணியில் இல்லை. ஆனாலும் இருவருமே நமது அரசை போட்டி போட்டுக்கொண்டு பாராட்டியுள்ளனர். அவர்கள் இருவரும் ஒருமித்து பாராட்டியுள்ளனர். இதேபோல், அவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்” என்றார்.
இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அருள், “சேலம் மாநகரின் 45 சதவீதம் பகுதியானது எனது சேலம் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குள் வருகிறது. தொகுதியின் சில பகுதிகளில் சாக்கடை வசதி இல்லை. எனவே, அதற்கான சிறப்புத் திட்டத்தை நிறைவேற்றித் தரக்கோரி சிறப்புத் திட்ட அமலாக்கத்துறையின் அமைச்சரான உதயநிதி ஸ்டாலினிடம் தான் கேட்க முடியும். அதற்காகத்தான் இந்த விழாவில் கலந்து கொண்டு அவரிடம் எனது கோரிக்கைகளை வைத்துள்ளேன்” என்றார்.
நீங்களும் சதாசிவமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் உதயநிதி அட்வைஸ் செய்தாரே... என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எங்களிடம் போட்டி இல்லை... பொறாமை இல்லை. எங்களை உருவாக்கியவர் டாக்டர் ஐயா. திமுக-வுடன் முதலில் கூட்டணியில் இருந்தோம். இப்போது இல்லை என்பதைத்தான் அப்படிச் சொன்னேன்” என்று கெட்டிக்காரத்தனமாக பதில் சொன்னார் அருள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT