Published : 18 Sep 2025 07:32 AM
Last Updated : 18 Sep 2025 07:32 AM
மதுரை: கோயிலுக்குள் பட்டியலின மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில், சரியாக நடவடிக்கை எடுக்காத கரூர் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்குமாறு அரசுக்கு, உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்த போலீஸ் பாதுகாப்பு கோரி வன்னியகுல சத்திரியர் நல அறக்கட்டளை தலைவர் முருகன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தாக்கல் செய்தார். அதேபோல, அக்கோயிலில் பட்டியலின மக்களைஅனுமதிக்கக் கோரியும், கோயிலை மூடுவது தொடர்பான கோட்டாட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தியும் மாரிமுத்து என்பவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுக்களை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது: சின்ன தாராபுரம் மாரியம்மன் கோயிலில் பட்டியல் சாதியினர் விலக்கி வைக்கப்பட்டுள்ள காட்சியை காண நேர்ந்தது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் எதற்காக இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் பதவி அலங்காரப் பதவி அல்ல, அரசியலமைப்பு பதவி.
அரசியலமைப்புவழங்கியுள்ள அதிகாரம், சலுகைகளை அனுபவிக்கும் ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும், அடிப்படை உரிமைகளை நிறை வேற்ற மறுக்கின்றனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாகஇரு சமூகங்களுக்கிடையே அமைதிக்கூட்டம் நடத்தி, அறநிலையத் துறை அதிகாரிகளின் துணையுடன்அனைத்து சாதியினரும் பங்கேற்கும் கூட்டு வழிபாடுநடத்த ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அதை செய்யாமல் 7 ஆண்டுகளாக சட்டம், ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி கோயிலை பூட்டி வைத்திருப்பது சரியல்ல.
கோயில்கள் அனைத்து பக்தர்களுக்கும் திறந்திருப்பதை உறுதி செய்யும் கடமை காவல் கண்காணிப்பாளருக்கு உண்டு. பட்டியலின மக்கள் கோயிலில் வழிபடுவதை தடுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சட்டம் ஒழுங்கை பாதுகாத்திருக்க வேண்டும். இவற்றை செய்வதற்கு பதிலாக கோயிலை மூடியுள்ளனர்.
ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளரும் சட்டப்படி செயல்பட்டிருந்தால் 2018 முதல் கோயில் மூடப்பட்டிருக்காது. பக்தர்களும் உரிமைக்காக நீதிமன்றத்தை நாடியிருக்க மாட்டார்கள். இருவரும் அரசியலமைப்பு கடமையிலிருந்து விலகிச் சென்றுள்ளனர். இந்த நடத்தையின் மூலம் இருவரும் கடமையை செய்ய தகுதியற்றவர்கள் என்று ஒப்புக்கொண்டுள்ளனர்.
இருவரின் செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கது. அரசு இருவரையும் இடமாறுதல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்கும் என்று நீதிமன்றம் எதிர்பார்க்கிறது. அப் போதுதான் சாதியின் பெயரால் கோயிலுக்குள் நுழைவதை தடுக்க துணிபவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT