Published : 18 Sep 2025 06:47 AM
Last Updated : 18 Sep 2025 06:47 AM
சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கட்சியில் மட்டுமல்ல கூட்டணியில்கூட சேர்க்க முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக தொடர் தோல்வியை சந்தித்து வரும் நிலையில், கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் சேர்த்தால் மட்டுமே 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி வெற்றி பெற முடியும் என்று கடந்த ஓராண்டாகவே முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சிலர் பழனிசாமியிடம் வலியுறுத்தி வந்தனர். அதை பழனிசாமி ஏற்கவில்லை. இந்நிலையில், கடந்த் ஏபரல் மாதம், அதிமுக-பாஜக கூட்டணியை பழனிசாமி முன்னிலையில் அமித் ஷா அறிவித்தார்.
கடந்த செப்.5-ம் தேதி அதிமுக ஒருங்கிணைப்புக்கு செங்கோட்டையன், பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். இதற்காக அவருடைய மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சிப்பதவிகள் பறிக்கப்பட்டன. மீண்டும் டெல்லி சென்று, அமித் ஷாவை செங்கோட்டையன் சந்தித்தார். இதன்தொடர்ச்சியாக நேற்று முன்தினம் டெல்லியில் அமித்ஷாவை பழனிசாமியும் சந்தித்தார்.
இந்த சந்திப்பில், “செங்கோட்டையனின் கோரிக்கை நியாயமாக தானே இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்வதில் உங்களுக்கு என்ன சிரமம்” என்று பழனிசாமியிடம் அமித்ஷா கேட்டதாகவும் அதற்கு பதில் அளித்த பழனிசாமி, இணைப்புக்கு சாத்தியமே இல்லை. அதிமுக ஆட்சியை கவிழ்க்கும் செயலில் ஈடுபட்ட யாருக்கும் அதிமுகவில் இடமில்லை என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
“அதிமுகவில் சேர்த்துக் கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. பாஜகவுக்கு ஒதுக்கும் தொகுதிகளில், உள்ஒதுக்கீடாக ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோருக்கு வழங்குவதில் உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா” என கேட்டதற்கு, “அதிமுகவை அழிக்க நினைத்தார்கள் என்று தமிழகம் முழுவதும் நான் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக அந்த தொகுதிகளில் என்னால் எப்படி பிரச்சாரம் செய்ய முடியும். எங்கள் கட்சி தொண்டர்கள் என்னை என்ன நினைப்பார்கள். அதுவும் சாத்தியமில்லை.
சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை அதிமுக கூட்டணியில் கூட சேர்க்க முடியாது” என்று பழனிசாமி பதில் அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர், “அப்படி எனில், தென் மாவட்டங்களில் அவர்களுக்கு உள்ள வாக்கு வங்கி நமக்கு கிடைக்காமல் போகும். இது திமுக வெற்றிக்கு சாதகமாக அமைந்துவிடுமே. திமுக ஆட்சியை அகற்றும் நோக்கத்துக்கு இந்த முடிவு இடையூறாக இருக்காதா” என்று அமித் ஷா கேட்டுள்ளார். அதற்கு, “அவர்களிடம் சொல்லிக்கொள்ளும்படியாக வாக்கு வங்கி இல்லை.
முத்துராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்கினால், அது நமது கூட்டணிக்கு மேலும் பலத்தை அளிக்கும்” என்று பழனிசாமி பதில் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. சந்திப்பை முடித்துக் கொண்டு நேற்று சென்னை விமானம் நிலையம் வந்த பழனிசாமி, வெளியே வராமல் அங்கிருந்தபடியே விமானம் மூலம் சேலம் சென்றார்.
இதனால் பழனிசாமியை வரவேற்க காத்திருந்த தொண்டர்களும், அமித் ஷாவுடனான சந்திப்பு குறித்து கேள்வி எழுப்ப காத்திருந்த செய்தியாளர்களும் ஏமாற்றம் அடைந்தனர். டெல்லியிலிருந்து பழனிசாமியுடன் வந்த தம்பிதுரை, விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது, பழனிசாமி-அமித் ஷா சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்றுவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT